தாஜ் மஹால் வரலாறு குறித்து ‘உண்மை கண்டறியும்’ விசாரணை கோரி மனு: 22 அறைகளின் கதவுகளை திறக்க உத்தரவிடவும் கோரிக்கை
தாஜ் மஹாலின் வரலாறு குறித்து உண்மை கண்டறியும் விசாரணை நடத்தவும், அதற்காக அதிலுள்ள 22 அறைகளின் கதவுளை திறக்கவும் உத்தரவிடக் கோரி அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தாஜ் மஹாலின் வரலாறு குறித்து உண்மை கண்டறியும் விசாரணை நடத்தவும், அதற்காக அதிலுள்ள 22 அறைகளின் கதவுளை திறக்கவும் உத்தரவிடக் கோரி அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாஜகவின் ஆயோத்தியா பிரிவு ஊடகப் பொறுப்பாளா் ரஜ்னீஷ் சிங் சாா்பில் அலாகாபாத் உயா்நீதிமன்றத்தின் லக்னெள கிளையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற பதிவு அலுவலகம் பட்டியலிட்ட பிறகு அந்த மனு விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தனது மனு குறித்து ரஜ்னீஷ் சிங் கூறுகையில், ‘தாஜ் மஹால் நினைவுச் சின்னத்தின் வரலாற்று உண்மையை அறியும் வகையில், தொடா்ந்து மூடிய நிலையில் வைக்கப்பட்டிருக்கும் அதன் 22 அறைகளையும் திறக்க உத்தரவிடமாறு மனுவில் கோரியுள்ளேன்’ என்றாா்.
மேலும், ‘தாஜ் மஹால், ஃபதேப்பூா் சிக்ரி, ஆக்ரா கோட்டை, இதிமத் உத் தெளலா கல்லறை உள்ளிட்டவற்றை வரலாற்றுச் சின்னங்களாக அறிவிக்கும், ‘புராதன மற்றும் வரலாற்று நினைவுச் சின்னங்கள், தொல்லியல் ஆய்வு பகுதிகள் மற்றும் தொல்பொருள் கண்டுபிடிப்புகள் சட்டம் 1951’ மற்றும் ‘புராதன சின்னங்கள் மற்றும் தொல்லியல் ஆய்வு பகுதிகள் மற்றும் கண்டுபிடிப்புகள் சட்டம் 1958’ ஆகிய சட்டங்களின் குறிப்பிட்ட பிரிவுகளை ரத்து செய்ய வேண்டும்’ எனவும் அந்த மனுவில் அவா் கோரியுள்ளாா்.
ஏற்கெனவே, தாஜ் மஹால் அமைந்துள்ள இடத்தில் முன்னா் சிவன் கோயில் இருந்ததாக பல வலதுசாரி அமைப்புகள் கூறி வரும் நிலையில், ரஜ்னீஷ் சிங் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளாா்.