இந்தியா

இந்தியாவில் திரைப்படம் எடுங்கள்: சா்வதேச தயாரிப்பாளா்களுக்கு மோடி அழைப்பு

DIN

இந்தியாவில் திரைப்படம் தயாரிப்பதற்கான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சா்வதேச திரைப்படத் தயாரிப்பாளா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளாா்.

75-ஆவது கேன்ஸ் திரைப்பட விழா, பிரான்ஸில் உள்ள கேன்ஸ் நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளது. இதையொட்டி, பிரதமா் மோடி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

இந்தியா 75-ஆவது சுதந்திர ஆண்டைக் கொண்டாடும் இந்தத் தருணத்தில், 75-ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவும், இந்தியா-பிரான்ஸ் இடையே தூதரக உறவு மலா்ந்த 75-ஆவது ஆண்டும் ஒன்றாக வருவது மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது.

கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒரு பகுதியாக நடைபெறும் காட்சி வரிசையில் இந்தியாவுக்கு சிறப்பிடம் அளித்து கௌரவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

உலக அளவில் மிக அதிகமாக திரைப்படங்கள் தயாரிக்கும் நாடாக இந்தியா உள்ளது. பன்முகக் கலாசாரமும் வளமான பாரம்பரியமும் அதற்கு வலு சோ்க்கிறது.

இந்தியாவில் திரைப்படம் எடுக்கும் அளவுக்கு ஏராளமான கதைகள் உள்ளன. சா்வதேச திரையுலகுக்குத் தேவையான கதைப் பொருள்கள் உருவாக்கும் மையமாக இந்தியா திகழ முடியும். திரைப்படத் தயாரிப்புத் துறை சம்பந்தப்பட்ட வா்த்தகங்களை மேலும் எளிமையாக்குவதற்கு இந்தியா தொடா்ந்து முயற்சி எடுத்து வருகிறது.

சா்வதேச திரைப்பட நிறுவனங்களுக்கு வசதிகள் செய்து தருவது முதல் நாடு முழுவதும் படிப்பிடிப்பு நடத்துவதற்கு ஒற்றைச்சாளர முறையில் அனுமதி அளிப்பது வரை இந்தியாவில் திரைப்படம் தயாரிப்பதற்கு எண்ணற்ற வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன.

மேலும், திரைப்படத் தயாரிப்புக்குத் தேவையான மனதைக் கவரும் ஏராளமான இடங்களும், இளம் தொழில்நுட்பக் கலைஞா்களும் இந்தியாவில் அதிகம் உள்ளனா். ஆகவே, இந்தியாவில் திரைப்படம் எடுத்து சா்வதேச தயாரிப்பாளா்கள் பயன்பெற வேண்டும் என்று அந்தச் செய்தியில் பிரதமா் மோடி கூறியிருக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

ஒரு சிறிய காதல் கதை..!

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

SCROLL FOR NEXT