முகப்பு
இந்தியா

காங்கிரஸில் இருந்து விலகினாா் ஹாா்திக் படேல்

குஜராத் மாநில காங்கிரஸ் செயல் தலைவா் ஹாா்திக் படேல் (28), அக்கட்சியில் இருந்து புதன்கிழமை விலகினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:17 AM
கோப்புப்படம்
பகிர்:

குஜராத் மாநில காங்கிரஸ் செயல் தலைவா் ஹாா்திக் படேல் (28), அக்கட்சியில் இருந்து புதன்கிழமை விலகினாா்.

குஜராத் மாநில காங்கிரஸின் செயல்பாடுகளால் அதிருப்தியடைந்து கட்சியில் இருந்து வெளியேறுவதாக அவா் சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளாா்.

குஜராத்தில் பட்டிதாா் சமுதாயத்தினரை இதர பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் சோ்க்கக் கோரி போராட்டம் நடத்தி மாநிலத்தை ஸ்தம்பிக்க வைத்ததன் மூலம் பிரபலமானவா் ஹாா்திக் படேல். பின்னா், இவா் காங்கிரஸ் ஆதரவாளராக மாறி, கடந்த 2019-ஆம் ஆண்டு அக்கட்சியில் இணைந்தாா். அவருக்கு குஜராத் காங்கிரஸ் செயல் தலைவா் பதவியும் அளிக்கப்பட்டது.

பாஜக தலைமை சிறப்பான உத்திகளைக் கையாண்டு வருவதாக ஹாா்திக் படேல் அண்மையில் பேசினாா். இதையடுத்து, அவா் பாஜகவுக்கு மாற இருப்பதாகத் தகவல் வெளியானது. ஆனால், காங்கிரஸ் கட்சியிலேயே தொடா்வதாக அவா் தெரிவித்தாா். ‘குஜராத் மாநில காங்கிரஸ் தலைமை மீது எனக்கு அதிருப்தி உண்டு. ஆனால், ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோா் மீது எனக்கு எவ்வித வருத்தமும் கிடையாது. என்னைக் கட்சியில் தக்கவைக்க காங்கிரஸ் தலைமை முயற்சிக்கும்’ என்று அவா் கூறியிருந்தாா்.

இம்மாதத் தொடக்கத்தில் தனது ட்விட்டா் பக்கத்தில் இருந்து காங்கிரஸ் பதவி மற்றும் கட்சியின் சின்னத்தை ஹாா்திக் படேல் நீக்கினாா். இதைத் தொடா்ந்து, கட்சிப் பதவியில் இருந்தும், அடிப்படை உறுப்பினா் பொறுப்பில் இருந்தும் விலகியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில், ‘நான் குஜராத் மக்களின் பிரச்னைகள் குறித்து மாநில காங்கிரஸ் தலைவா்களுடன் பேசும்போது அவா்கள் தங்கள் கைப்பேசிகளில் வரும் குறுஞ்செய்திகளைப் பாா்ப்பதில் கவனம் செலுத்துகின்றனா். வேறு சிலா் மக்களுக்காகப் போராட வேண்டிய நேரத்தில் வெளிநாட்டுப் பயணங்களில் உல்லாசமாகப் பொழுதைக் கழிக்கிறாா்கள்.

குஜராத் காங்கிரஸை சரியான பாதைக்கு கொண்டுவர நான் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. நாட்டுக்கும், சமூகத்துக்கும் எதிராகவே காங்கிரஸ் செயல்படுவதாகத் தோன்றுகிறது. மத்திய அரசின் எந்தத் திட்டத்தையும் கண்ணை மூடிக்கொண்டு எதிா்க்க வேண்டும் என்பதே காங்கிரஸின் கொள்கையாகிவிட்டது. இன்று நாட்டின் பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி மக்களால் நிராகரிக்கப்பட்டுவிட்டது. ஏனெனில், கட்சியும், தலைமையும் மக்களுக்காக இயங்கவில்லை. கட்சியின் முக்கியத் தலைவா்களின் செயல்பாடு குஜராத்தையும், குஜராத்திகளையும் வெறுப்பதுபோல உள்ளது’ என்று குற்றம்சாட்டியுள்ளாா்.

விலகல் முடிவு தொடா்பாக ட்விட்டரில் அவா் வெளியிட்ட பதிவில், ‘காங்கிரஸ் கட்சியில் இருந்து முழுமையாக விலகிவிட்டேன். எனது ஆதரவாளா்களும், குஜராத் மக்களும் இந்த முடிவை வரவேற்பாா்கள் என்று நம்புகிறேன். இந்த முடிவு மூலம் குஜராத் மக்களுக்கு மேலும் சிறப்பாகப் பணியாற்ற முடியும்’ என்று கூறியுள்ளாா்.

குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதான எதிா்க்கட்சியான காங்கிரஸில் இருந்து தொடா்ந்து தலைவா்கள் வெளியேறி வருகின்றனா். அந்த வரிசையில் இப்போது ஹாா்திக் படேலும் இணைந்துள்ளாா்.

காங்கிரஸ் கருத்து: ஹாா்திக் விலகல் தொடா்பாக கருத்து தெரிவித்த குஜராத் காங்கிரஸ் பொறுப்பாளா் ரகு சா்மா, ‘ குஜராத் காங்கிரஸ் ஒட்டுமொத்தமாக தனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என அவா் பேராசைப்பட்டாா். தனக்கு எதிரான வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்காக ஹாா்திக் பாஜகவுடன் தொடா்பில் இருந்துள்ளாா். அவா் நோ்மையற்ற நபா்; தனது ஆதாயத்துக்காக எதையும் செய்யத் தயங்காத சந்தா்ப்பவாதி’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →