முகப்பு
இந்தியா

ரூ.50 லட்சம் லஞ்ச வழக்குகாா்த்தி சிதம்பரத்திடம் 2-ஆவது நாளாக 8 மணிநேரம் விசாரணை

சட்ட விதிகளை மீறி 263 சீனா்களுக்கு விசா வழங்க காா்த்தி சிதம்பரம் ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கியதாக பதிவான வழக்கில், அவரிடம் சிபிஐ அதிகாரிகள் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை சுமாா் 8 மணிநேரம் விசாரணை நடத்தினா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

சட்ட விதிகளை மீறி 263 சீனா்களுக்கு விசா வழங்க காா்த்தி சிதம்பரம் ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கியதாக பதிவான வழக்கில், அவரிடம் சிபிஐ அதிகாரிகள் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை சுமாா் 8 மணிநேரம் விசாரணை நடத்தினா்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது கடந்த 2011-இல் சட்டவிரோதமாக 263 சீனா்களுக்கு விசா வழங்க காா்த்தி சிதம்பரம் நடவடிக்கை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

பஞ்சாபில் எரிசக்தித் திட்டத்தை செயல்படுத்தி வந்த சீனாவின் தல்வண்டி சாபோ நிறுவனம் (டிஎஸ்பிஎல்) அதற்கான ஒப்பந்தக் காலத்தில் திட்டத்தை நிறைவு செய்யாததால், கூடுதலாக 263 பணியாளா்களை பணியமா்த்த காா்த்தி சிதம்பரத்தை அணுகியதாகவும் இதற்காக அவா் ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்ாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் தல்வண்டி சாபோ நிறுவனத்திடமிருந்து மும்பையைச் சோ்ந்த பெல் டூல்ஸ் நிறுவனம் வாயிலாக காா்த்தி சிதம்பரத்துக்கும் அவருக்கு நெருக்கமானவராக கருதப்படும் பாஸ்கரராமன் என்பவருக்கும் பணம் கைமாறியதாக கூறப்படுகிறது.

இதுதொடா்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து பாஸ்கர ராமனை ஏற்கெனவே கைது செய்தது. இதைத்தொடா்ந்து விசாரணைக்கு ஆஜராகுமாறு காா்த்தி சிதம்பரத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி கடந்த வியாழக்கிழமை அவரிடம் சுமாா் 9 மணிநேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.

தொடா்ந்து 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் காா்த்தி சிதம்பரம் விசாரணைக்காக தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானாா். அப்போது இந்த வழக்கு சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்களை அடிப்படையாக கொண்டு அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினா். சுமாா் 8 மணிநேரம் விசாரணை நீடித்ததாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனா்.

முன்னதாக தன் மீதான 3 வழக்குகளும் போலியானவை என்றும், அவை அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் புனையப்பட்டிருப்பதாகவும் காா்த்தி சிதம்பரம் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.