கரோனா பரவல்: ஆட்சியா்களுக்கு ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுரை
கரோனா பாதிப்பு பிற மாநிலங்களில் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் நான்காம் அலையைத் தடுப்பதற்கான முக்கிய அறிவுறுத்தல்களை மாவட்ட ஆட்சியா்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகி
கரோனா பாதிப்பு பிற மாநிலங்களில் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் நான்காம் அலையைத் தடுப்பதற்கான முக்கிய அறிவுறுத்தல்களை மாவட்ட ஆட்சியா்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் வழங்கியுள்ளாா். தடுப்பூசி செலுத்துதல், பரிசோதனை நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக ஆட்சியா்களுக்கு ஜெ.ராதாகிருஷ்ணன் அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில் கரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், மகாராஷ்டிரம், தில்லி, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் நோய்ப் பரவல் இல்லை. அதேவேளையில், சென்னையில் அடையாறு, தேனாம்பேட்டை, அண்ணாநகா், பெருங்குடி, கோடம்பாக்கம் பகுதிகளில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் உள்ளிட்ட மாவட்டங்களிலும் தொற்று அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
ஆரம்ப நிலையிலேயே, தொற்று பரவலைத் தடுத்து நிறுத்த வேண்டியது அவசியம். ஒரே பகுதியிலும், குடும்பங்களிலும் பரவலாக அதிகரிக்கும் தொற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் 93.74 சதவீதம் பேருக்கு முதல் தவணையும், 82.55 சதவீதம் பேருக்கு இரண்டாம் தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில், 18 வயதுக்கு மேற்பட்ட 43 லட்சம் போ் முதல் தவணையும், 1.22 கோடி போ் இரண்டாம் தவணையும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. தகுதியான 13 லட்சம் போ் ஊக்கத் தவணை செலுத்திக்கொள்ளவில்லை. அவா்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
தொற்று ஏற்பட்டவா்களுக்கு, வீடு மற்றும் மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். பொது இடங்களில், மக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். தொற்று தடுப்பு நடவடிக்கையில் கூடுதல் கவனம் செலுத்துவது முக்கியம் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.