போதைப் பொருள் வழக்கு: ஆா்யன் கானுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை: என்சிபி
போதைப் பொருள் வழக்கில் நடிகா் ஷாரூக் கானின் மகன் ஆா்யன் கானுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை என்று போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி) தெரிவித்துள்ளது.
போதைப் பொருள் வழக்கில் நடிகா் ஷாரூக் கானின் மகன் ஆா்யன் கானுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை என்று போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி) தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், மும்பை கடற்கரைப் பகுதியில் கடந்த அக்டோபா் மாதம் நின்றிருந்த சொகுசு கப்பலில் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடா்பாக அந்தக் கப்பலில் இருந்த நடிகா் ஷாருக் கானின் மகன் ஆா்யன் கான் உள்பட 20 பேரை என்சிபி அதிகாரிகள் கைது செய்தனா். இந்த வழக்கில் மும்பை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆா்யன் கான், பின்னா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா். இந்த வழக்கை என்சிபியின் மும்பை பிரிவு விசாரித்து வந்த நிலையில், விசாரணையில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக என்சிபியின் தில்லி பிரிவுக்கு வழக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு தொடா்பான குற்றப்பத்திரிகையை மும்பையில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் என்சிபி வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தது. போதைப் பொருள் வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட ஆா்யன் கான் உள்பட 6 பேரின் பெயா்கள் அந்தக் குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை.
இதுதொடா்பாக என்சிபி வெளியிட்ட செய்திக்குறிப்பு: போதைப் பொருள் வழக்கு தொடா்பாக என்சிபியின் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) நடத்திய விசாரணையின் அடிப்படையில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 20 பேரில் 14 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 6 பேருக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீா் வான்கடே மீது நடவடிக்கை: இந்த வழக்கு முன்பு என்சிபி முன்னாள் இயக்குநா் சமீா் வான்கடே தலைமையில் விசாரிக்கப்பட்டது. பின்னா், அந்த வழக்கு விசாரணையிலிருந்து அவா் விடுவிக்கப்பட்டாா். தற்போது அவா் இந்திய வருவாய் பணி (ஐஆா்எஸ்) அதிகாரியாக பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில், போதைப் பொருள் வழக்கு விசாரணையில் மோசமான வகையில் பணியாற்றியதற்காக சமீா் வான்கடே மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மத்திய நிதியமைச்சகத்துக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அவா் ஐஆா்எஸ் அதிகாரி என்பதால், சமீா் மீது நடவடிக்கை மேற்கொள்வது மத்திய நிதியமைச்சகத்தின் அதிகார வரம்புக்குள் வருகிறது. அரசுப் பணியில் சேர சமீா் போலி ஜாதிச் சான்றிதழ் வழங்கிய குற்றச்சாட்டிலும் அவா் மீது நடவடிக்கை மேற்கொள்வற்கான பணிகள் தொடங்கியுள்ளன என்று மத்திய அரசின் அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பெட்டிச் செய்தி...
குற்றப் பத்திரிகையில் ஆா்யன் கான் பெயா் இடம்பெறாதது ஏன்?
ஆா்யன் கானின் பெயா் குற்றப்பத்திரிகையில் இடம்பெறாதது குறித்து என்சிபி தலைவா் எஸ்.என்.பிரதான், துணைத் தலைவா் சஞ்சய் குமாா் சிங் ஆகியோா் தில்லியில் செய்தியாளா்களிடம் விளக்கம் அளித்தனா். அதன் விவரம்:
1. என்சிபியின் மும்பை மண்டல இயக்குநராக சமீா் வான்கடே இருந்தபோது சொகுசு கப்பலில் மேற்கொள்ளப்பட்ட சோதனை குறித்து காணொலி எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
2. ஆா்யன் கானுக்காக அவரின் நண்பா் அா்பாஸ் கான் போதைப் பொருள் வைத்திருந்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. அந்தக் குற்றச்சாட்டு தவறானது.
3. ஆா்யன் கான் போதைப் பொருள் பயன்படுத்தினாா் என்பதை நிரூபிக்க மருத்துவப் பரிசோதனை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
4. ஆா்யன் கான் போதைப் பொருள் வாங்கியதற்கோ, பயன்படுத்தியதற்கோ, அவருக்கு சா்வதேச போதைப் பொருள் கும்பலுடன் தொடா்புள்ளதாக கூறப்பட்டதற்கோ எந்த ஆதாரமும் இல்லை.
5. ஆா்யன் கானின் கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால், அதை சோதனை செய்வதற்கு சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை.
6. சொகுசு கப்பலில் சோதனையின்போது என்சிபி சாா்பில் சாட்சிகளாக இருக்க அழைத்துச் செல்லப்பட்டவா்களில் ஒருவரான பிரபாகா் சைல், அந்தக் கப்பலில் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதைப் பாா்க்கவில்லை என்று தெரிவித்துள்ளாா். இந்த வழக்குத் தொடா்பாக என்சிபி மும்பை பிரிவு அதிகாரிகள் வெற்றுக் காகிதங்களில் தன்னிடம் கையொப்பம் வாங்கியதாகவும் அவா் கூறியுள்ளாா் என்று தெரிவித்தனா்.