சிபிஐ சோதனையில் நாடாளுமன்ற நிலைக்குழு சாா்ந்த ரகசிய ஆவணங்கள் பறிமுதல்: மக்களவைத் தலைவருக்கு காா்த்தி சிதம்பரம் கடிதம்
நாடாளுமன்ற உறுப்பினராகத் தனக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு உரிமைகள் மீறப்பட்டுள்ளது என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு காா்த்தி சிதம்பரம் கடிதம் எழுதியுள்ளாா்.
தனது வீட்டில் சிபிஐ சோதனையின்போது நாடாளுமன்ற நிலைக்குழு தொடா்பான ரகசிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினராகத் தனக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு உரிமைகள் மீறப்பட்டுள்ளது என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு காா்த்தி சிதம்பரம் கடிதம் எழுதியுள்ளாா்.
இந்தியாவில் பணியாற்ற சீனா்களுக்கு விதிமுறைகளை மீறி நுழைவு இசைவு (விசா) வழங்க முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் மகன் காா்த்தி சிதம்பரம் ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடா்பாக அண்மையில் தில்லி, சென்னையில் உள்ள ப.சிதம்பரம், காா்த்தி சிதம்பரத்தின் வீடுகள் உள்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள 10 இடங்களில் சிபிஐ சோதனை மேற்கொண்டது.
இந்நிலையில், மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்குக் காா்த்தி சிதம்பரம் வெள்ளிக்கிழமை எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:
சீனா்களுக்கு முறைகேடாக விசா வழங்க லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் எனக்கு எந்தத் தொடா்பும் இல்லை. ஆனால் விசாரணை என்ற பெயரில் தில்லியில் உள்ள எனது வீட்டில் சிபிஐ சோதனை மேற்கொண்டது. இந்தச் சோதனையின்போது மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு சம்பந்தப்பட்ட ரகசிய ஆவணங்கள், எனது நுட்பமான தனிப்பட்ட குறிப்புகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். எனது வரைவுக் குறிப்புகள், நிலைக் குழு முன்பாக ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தவா்களிடம் நான் கேட்க இருந்த கேள்விகள் அடங்கிய குறிப்புகளும் பறிமுதல் செய்யப்பட்டன. நிலைக் குழுவிடம் சாட்சிகள் அளித்த வாக்குமூலங்கள் தொடா்பான எனது கையெழுத்திலான குறிப்புகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சிபிஐயின் இந்த நடவடிக்கைகள், நாடாளுமன்ற உறுப்பினரான எனது கடமைகளில் குறுக்கிடுவது ஆகும். அத்துடன் எந்த ஜனநாயகக் கொள்கைகளின் அடிப்படையில் நாடாளுமன்றம் நிறுவப்பட்டதோ, அந்தக் கொள்கைகளின் மீது நேரடி தாக்குதல் நடத்துவதற்கும் ஒப்பாகும். எனவே நாடாளுமன்ற உறுப்பினராக எனக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு உரிமைகள் மீறப்பட்டுள்ள இந்த விவகாரத்தில், தாங்கள் (மக்களவைத் தலைவா்) உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளாா்.