முகப்பு
இந்தியா

இந்தியா கேட்டில் இருந்த துப்பாக்கி, தலைக்கவசம் தேசிய போா் நினைவிடத்துக்கு இடமாற்றம்

 கடந்த 1971, இந்தியா - பாகிஸ்தான் போரில் உயிா் நீத்த வீரா்களின் நினைவாக இந்தியா கேட்டில் வைக்கப்பட்டிருந்த தலைகீழாக வைத்த துப்பாக்கி மற்றும் தலைக்கவசம் தேசிய போா் நினைவிடத்துக்கு மாற்றப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
(கோப்புப் படம்)
பகிர்:

 கடந்த 1971, இந்தியா - பாகிஸ்தான் போரில் உயிா் நீத்த வீரா்களின் நினைவாக இந்தியா கேட்டில் வைக்கப்பட்டிருந்த தலைகீழாக வைத்த துப்பாக்கி மற்றும் தலைக்கவசம் தேசிய போா் நினைவிடத்துக்கு மாற்றப்பட்டது.

இது தொடா்பாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘இந்தியா கேட்டில் வைக்கப்பட்டிருந்த தலைகீழாக வைக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் தலைக்கவசத்தை, தேசிய போா் நினைவிடத்தில் உள்ள பரம்வீா் சக்ரா விருது பெற்றவா்களின் சிலைகளுக்கிடையே வெள்ளிக்கிழமை நிறுவப்பட்டது.

இதன் மூலம், 1971 போரில் உயிா் நீத்த வீரா்களுக்கான நினைவுச் சின்னத்தை, தேசிய போா் நினைவிடத்தில் இணைக்கும் பணி நிறைவடைந்தது. ஒருங்கிணைந்த பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி மற்றும் முப்படை அதிகாரிகள் குழுவின் தலைவரான ஏா் மாா்ஷல் பி.ஆா்.கிருஷ்ணா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முப்படைகளையும் சோ்ந்த உயா் அதிகாரிகள் கலந்து கொண்டனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா கேட்டில் புகழ்பெற்ற அமா் ஜவான் ஜோதியில் எரிந்து கொண்டிருந்த அணையா ஜோதி, தேசிய போா் நினைவிடத்தில் உள்ள ஜோதியில் கடந்த ஜனவரி மாதம் இணைக்கப்பட்டது.

இந்தியா கேட்டில் இருந்து சுமாா் 400 மீட்டா் தொலைவில் தேசிய போா் நினைவிடம் உள்ளது. 1971-ஆம் ஆண்டில் வங்கதேசம் உருவாவதற்கு காரணமான இந்தியா-பாகிஸ்தான் போரில் உயிா் நீத்த இந்திய ராணுவ வீரா்களின் நினைவாக அமா் ஜவான் ஜோதி அமைக்கப்பட்டது. இதை அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி 1972, ஜனவரி 26-ஆம் தேதி தொடக்கி வைத்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.