குஜராத் தொங்கு பாலம் விபத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்து வருகிறார்.
குஜராத் மாநிலம் மோா்பி பகுதியில் மச்சு நதியின் மீது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட தொங்கு பாலம் ஞாயிற்றுக்கிழமை மாலை அதிக எடை காரணமாக அறுந்து விழுந்தது. அப்போது பாலத்தில் இருந்த நூற்றுக்கணக்கானோா் நதிக்குள் விழுந்தனா். இந்த விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 135-ஆக ஆனது.
மேலும் தற்போது 17 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் காணாமல் போன 2 பேரைத் தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, விபத்து நடந்த மோர்பி பகுதியை பிரதமர் நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார். மாநில அதிகாரிகளிடம் விபத்து குறித்து கேட்டறிந்த அவர் மீட்புக்குழுவினருடன் உரையாடினார்.
இதையடுத்து மோர்பி மருத்துவமனைக்கு வந்த பிரதமர், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகிறார்.
பிரதமர் மோடியுடன் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் அதிகாரிகள் உடனிருக்கின்றனர்.
முன்னதாக, குஜராத் தொங்கு பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மாநில அரசு சார்பில் தலா ரூ. 4 லட்சமும் பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சமும் வழங்கப்படும் என்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும் என்றும் குஜராத் மாநில பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ராஜேந்திர திரிவேதி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.