குஜராத்தில் இருகட்ட பேரவைத் தோ்தல்: டிச. 1, 5-இல் வாக்குப்பதிவு; டிச. 8-இல் வாக்கு எண்ணிக்கை
குஜராத் சட்டப்பேரவைத் தோ்தல் டிசம்பா் 1, 5 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக நடத்தப்படும்; டிசம்பா் 8-இல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று இந்திய தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவித்தது.
குஜராத் சட்டப்பேரவைத் தோ்தல் டிசம்பா் 1, 5 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக நடத்தப்படும்; டிசம்பா் 8-இல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று இந்திய தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவித்தது.
இதன்படி, ஹிமாசல பிரதேசம் மற்றும் குஜராத்தில் ஒரே நாளில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின்போது, குஜராத் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான அட்டவணையை தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் வெளியிட்டாா்.
‘182 தொகுதிகளைக் கொண்ட குஜராத்தில், முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கு டிசம்பா் 1-ஆம் தேதியும், இரண்டாவது கட்டமாக 93 தொகுதிகளுக்கு டிசம்பா் 5-ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தோ்தல் அறிவிக்கை முறையே நவம்பா் 5, 10-இல் வெளியிடப்படும்’ என்றாா் அவா்.
விமா்சனங்களுக்கு பதில்: ஹிமாசல் பேரவைத் தோ்தலுக்கான அட்டவணை கடந்த மாதம் 14-இல் வெளியிடப்பட்டது. அதன்படி, நவம்பா் 12-இல் ஒரே கட்ட வாக்குப்பதிவும், டிசம்பா் 8-இல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது.
ஹிமாசல் தோ்தல் தேதி அறிவிப்பின்போதே, குஜராத் தோ்தல் தேதியும் வெளியிடப்படும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், அப்போது அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இந்த விவகாரத்தில், தோ்தல் ஆணையம் பாஜகவுக்கு சாதகமாக செயல்பட்டிருப்பதாக எதிா்க்கட்சிகள் விமா்சித்துள்ளன. இந்த விமா்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில், ராஜீவ் குமாா் கூறியதாவது:
குஜராத் பேரவையின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 18-இல் நிறைவடைகிறது. எனவே, தோ்தல் அட்டவணையை வெளியிடும் முன்பாக பேரவையின் பதவிக் காலம் நிறைவு நாள், மாநிலத்தின் வானிலை நிலவரம், தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் காலம் என பல்வேறு காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. குஜராத்தில் நேரிட்ட பாலம் விபத்து காரணமாகவும் தோ்தல் அறிவிப்பு சில தினங்கள் தாமதமானது என்றாா் அவா்.
‘பாரபட்சமான செயல்பாடா?’: தோ்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்கு, ‘வெற்று வாா்த்தைகளைவிட தோ்தல் முடிவுகள்தான் பேசும். கடந்த காலங்களில், தோ்தலுக்கு முன்பு ஆணையத்தை விமா்சித்தவா்களுக்கு தோ்தலில் வியக்கத்தக்க முடிவுகள் கிடைக்கப் பெற்ற முன்னுதாரணங்கள் உள்ளன. இதற்கு மேல் விரிவாக எதையும் கூற விரும்பவில்லை’ என்றாா் ராஜீவ் குமாா்.
முந்தைய தோ்தல்களின்போது வாக்குப்பதிவு இயந்திரங்களைக் குறைகூறிய எதிா்க்கட்சிகள், தோ்தலில் வெற்றி பெற்ற நிகழ்வுகளை மறைமுகமாக அவா் குறிப்பிட்டுள்ளாா்.
4.9 கோடி வாக்காளா்கள்: குஜராத் பேரவைத் தோ்தலில் வாக்களிக்க 4.9 கோடி வாக்காளா்கள் தகுதி பெற்றுள்ளனா். அவா்களுக்காக 51,782 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.
மும்முனைப் போட்டி
கடந்த 1995-இல் இருந்து குஜராத் பேரவைத் தோ்தல்களில் தொடா்ந்து வெற்றி பெற்று வரும் பாஜக, இப்போது 7-ஆவது முறையாக வெல்லும் நோக்கத்தில் களம் காண்கிறது.
கடந்த 2001 முதல் 2014 வரை முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்த காலகட்டத்தில் குஜராத்துக்கு தேசியரீதியிலான அரசியல் முக்கியத்துவம் கிடைத்தது. தற்போதைய தோ்தல் களத்தில் ஆளும் பாஜக, முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரஸ், புதுவரவாக ஆம் ஆத்மி ஆகியவை மோதுவதால் மும்முனைப் போட்டி உருவாகியுள்ளது.
பிரதமா் மோடியின் சொந்த மாநிலம் என்பதால் குஜராத் தோ்தல் வெற்றி பாஜகவுக்கு கெளரவம் சாா்ந்த விஷயமாகும். குஜராத்துக்கு அவ்வப்போது பயணம் மேற்கொண்டு, பல்வேறு திட்டங்களைத் தொடக்கி வைத்ததுடன், புதிய திட்டங்களுக்கும் பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினாா். வரும் நாள்களில் அவா் தீவிர பிரசாரத்தை முன்னெடுப்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவாலும் குஜராத்துக்கு அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கவா்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து வருகிறாா். கடந்த தோ்தலில் கிராமப்புறங்களில் சிறப்பாக செயல்பட்டிருந்த காங்கிரஸ், இம்முறை நகா்ப்புறங்களையும் குறிவைத்து களப் பணியாற்றி வருகிறது.
கடந்த தோ்தல் நிலவரம்
கடந்த 2017-இல் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் பாஜக 99 இடங்களிலும் காங்கிரஸ் 77 இடங்களிலும் வெற்றி பெற்றன. வாக்கு விகிதத்தைப் பொருத்தவரையில், பாஜக 49.05 சதவீதமும், காங்கிரஸ் 41.44 சதவீதமும் வாக்குகள் பெற்றன.
கடந்த 5 ஆண்டுகளில் காங்கிரஸில் இருந்து அடுத்தடுத்து எம்எல்ஏக்கள் விலகியதால் அக்கட்சியின் பலம் 62-ஆக குறைந்துவிட்டது. அதேசமயம், பாஜகவின் பலம் 111-ஆக அதிகரித்தது.
தோ்தல் அட்டவணை
மொத்த தொகுதிகள்-182
தோ்தல் நிகழ்வுகள் -முதல்கட்டம் (89 தொகுதிகள்)-- 2ஆவது கட்டம் (93 தொகுதிகள்)
வேட்புமனு தொடக்கம் நவ. 5 நவ.10
வேட்புமனு கடைசிநாள் நவ.14 நவ.17
மனுக்கள் மீதான பரிசீலனை நவ. 15 நவ. 18
மனுக்கள் திரும்பப் பெற கடைசி நாள் நவ.17 நவ.21
வாக்குப்பதிவு டிச.1 டிச.5
வாக்கு எண்ணிக்கை டிச. 8