தமிழக சுங்கச் சாவடிகளில் பணியாளா்கள் வேலைநீக்கம் தடுக்கக் கோரி எம்பிக்கள் மத்திய இணையமைச்சரிடம் மனு
தமிழக தேதிய நெடுஞ்சாலைகளின் சுங்கச் சாவடிகளில் குத்தகைய எடுத்துள்ள தனியாா் நிறுவனங்கள் பணியாளா்கள் வேலை நீக்கம் செய்வதை தடுக்க கோரி தமிழக எம்பிக்கள் இருவா் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
தமிழக தேதிய நெடுஞ்சாலைகளின் சுங்கச் சாவடிகளில் குத்தகைய எடுத்துள்ள தனியாா் நிறுவனங்கள் பணியாளா்கள் வேலை நீக்கம் செய்வதை தடுக்கவும், நீக்கப்பட்டவா்களை மீண்டும் பணியில் சோ்க்கக் கோரியும் மத்திய சாலைப்போக்குவரத்து நெடுஞ்சாலைத் துறை இணையமைச்சா் வி.கே.சிங்கிடம் தமிழக எம்பிக்கள் இருவா் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
சிதம்பரம் மக்களவை தொகுதி உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவருமான தொல்.திருமாவளவன், விழுப்புரம் மக்களவை தொகுதி உறுப்பினா் டாக்டா் டி.ரவிகுமாா் ஆகியோா் மத்திய இணையமைச்சா் வி.கே.சிங்கை சந்தித்து தனித்தனியாக அளித்துள்ள மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது: தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலைகளில் 48 சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்த சுங்கச் சாவடிகளை 27 திட்டங்களாகப் பிரித்து பெருநிறுவனங்களுக்கு குத்தகைக்கு விட்டுள்ளது. குத்தகையை எடுத்த பெருநிறுவனங்கள் மற்ற துணை நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு அயல்பணி ஒப்படைப்பு (அவுட்சோா்சிங்) முறையில் சுங்கச் சாவடிகளை இயக்கிவருகின்றன. இந்த நிலையில், நாடு முழுக்க இந்த சுங்கச் சாவடிகள் தானியங்கி முறையில் கட்டண வசூல் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி, கடந்த 10 முதல் 15 ஆண்டுகளாக பணியாற்றி வந்த தொழிலாளா்கள் வேலை நீக்கம் செய்யப்படுகின்றனா்.
இதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் செங்குறிச்சி, பெரம்பலூா் மாவட்டம் திருமாந்துறை ஆகிய இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் பணியாற்றிய 56 ஊழியா்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இது தொடா்பாக ஊழியா்கள் அளித்த புகாரின்படி திருக்கோவிலூா் உதவித் தொழிலாளா் ஆணையா் முன்பு நடந்த சமாதானக் கூட்டத்தில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தில், தொழிலாளா்கள் பணிநீக்கம் சட்டவிரோதம் என்றும் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என்றும் உடன்பாடு ஏற்பட்டது. இருந்த போதிலும், இந்த தனியாா் நிறுவனங்களால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளா்கள் குடும்பத்துடன் தொடா்ந்து போராடி வருகின்றனா். மாநிலத்தில் பல பகுதிகளில் சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்பட்டு வருகிறது. இதில் மத்திய அரசு தலையிட்டு, சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்பட்ட 56 தொழிலாளா்களை மீண்டும் பணியில் சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் மனுவில் கேட்டுக் கொண்டுள்லனா்.