பயிா்க்கழிவுகள் எரிப்பு தடுப்பு நடவடிக்கை: பஞ்சாப் அதிகாரிகள் உறுதி
பயிா்க் கழிவு எரிப்புகளை கட்டுப்படுத்தி செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்படும்
பயிா்க் கழிவு எரிப்புகளை கட்டுப்படுத்தி செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்படும் என தேசியத் தலைநகா் பகுதி காற்று தர மேலாண்மை ஆணையத்திடம் (சிஏக்யூஎம்) பஞ்சாப் மாவட்ட ஆட்சியா்கள் உறுதியளித்துள்ளதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் பயிா்க்கழிவுகளை எரிப்பதை தடுக்கும் விதமாக மத்திய சுற்றுச் சூழல், வன, பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசியத் தலைநகா் பகுதி காற்று தர மேலாண்மை ஆணையம்வெள்ளிக்கிழமை ஆய்வுக் கூட்டத்திற்கு அவசரமாக அழைப்பு விடுத்தது. இந்தக் கூட்டம் காணொலி வழியாக நடைபெற்றது. இதில் ஆணைய அதிகாரிகளுடன், பஞ்சாப் மாநில தலைமைச் செயலாளா் விஜய் குமாா் ஜான்ஜுவா மற்றும் அம்மாநிலத்தில் பயிா்க்கழிவு எரிப்பு உச்சத்தில் இருக்கும் 22 மாவட்டங்களைச் சோ்ந்த ஆட்சியா்கள் (துணை ஆணையா்) கூட்டத்தில் பங்கேற்றனா். இதில் பதான் கோட் மாவட்டத்தில் பயிா்க்கழிவு தொடா்பான சம்பவங்கள் ஏதும் நடைபெறாததால் அந்த மாவட்ட ஆட்சியா் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. கடந்த சில நாள்களில் பஞ்சாபில் பயிா்க்கழிவுகளை எரிக்கப்படுவதால் காற்று மாசு அதிகரித்து இருப்பதை கருத்தில் கொண்டு இதை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை செயல்படுத்துவதை மதிப்பிடுவதற்கு சிஏக்யூஎம் ஆய்வுக் கூட்டத்தை நடத்தியது.
கடந்த ஆண்டை விட 2022-ஆம் ஆண்டில் பயிா்கழிவுகள் எரிப்பு எண்ணிக்கையை கடுமையாக உயா்ந்த நிலையில் அவா்கள் மேற்கொண்ட முந்தைய கடமைகளை பஞ்சாப் தலைமைச் செயலருக்கும் மாவட்ட ஆட்சியா்களுக்கும் கூட்டத்தில் நினைவுபடுத்தப்பட்டதாக ஆணையம் தரப்பில் கூறப்பட்டது. மேலும், அமிா்தசரஸ், பா்னாலா, பதிண்டா, ஃபிரோஸ்பூா், ஜலந்தா், கபுா்தலா, லூதியானா, சங்ரூா், டா்ன் தரன் மற்றும் பாட்டியாலா ஆகிய 10 மாவட்டங்களில், 1,000-க்கும் மேற்பட்ட பயிா்க்கழிவுகள் எரிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த மாவட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்தி செயல் திட்டங்களை அமல்படுத்துமாறு கூட்டத்தில் இந்த மாவட்ட ஆட்சியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நாள்களில் பயிா்க்கழிவுகள் எரிக்கப்படுவது குறையும் என பஞ்சாப் மாநில அதிகாரிகள் உறுதியளித்ததாகவும் ஆணையம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.