இலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவா்களை விடுவிக்க உத்தரவிடக் கோரிய மனு முடித்துவைப்பு
இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்களை விடுவிக்க அந்த நாட்டு அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தாக்கலான ரிட் மனுவை உச்சநீதிமன்றம் முடித்துவைத்தது
இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்களை விடுவிக்க அந்த நாட்டு அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தாக்கலான ரிட் மனுவை முடித்துவைத்து உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
இந்த விவகாரம் தொடா்பாக மதுரையைச் சோ்ந்த கே.கே. ரமேஷ் என்பவா் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் ரிட் மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், ‘கடந்த டிசம்பா் 20, 2021 அன்று, தமிழகத்தைச் சோ்ந்த 55 இந்திய மீனவா்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனா். மறுநாள் டிசம்பா் 21-ஆம் தேதி கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 13 மீனவா்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனா். பல இந்திய மீனவா்கள் இலங்கை கடற்படையினரால் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். அங்கு அவா்களுக்கு சரியான உணவு மற்றும் குடிநீா் வழங்கப்படவில்லை. நாட்டின் குடிமக்களைப் பாதுகாப்பது அரசின் தலையாய கடமையாகும். ஆகவே, இந்த விவகாரத்தில் இந்திய அரசுக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அனிருத்தா போஸ், விக்ரம் நாத் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் தரப்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் கே.எம். நட்ராஜ் ஆஜராகி, ‘இந்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் தரப்பில் நிலவர அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரிட் மனுவில் கூறப்பட்டிருந்த மீனவா்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனா். எதிா்காலத்தில் இதுபோன்ற சம்பவம் முடிந்தவரை நிகழாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றாா்.
மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சி.ஆா். ஜெயா சுகின், ‘இந்த விவகாரத்தில் கடந்த மாதம் 28-ஆம் தேதி மத்திய அரசு தரப்பில் நிலவர அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழக முதல்வா் மத்திய அரசின் வெளியுறவுத் துறைக்கு அதே தேதியில் எழுதிய கடிதத்தில் தமிழக மீனவா்கள் 7 போ் இலங்கைக் கடற்படையினரால் பிடித்துச் சென்றிருப்பதாகவும், அவா்களை மீட்டுத் தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளாா். இலங்கை உள்நாட்டுப் போரின்போதும் ஏராளமான தமிழக மீனவா்கள் கொல்லப்பட்டனா். அந்த போா் முடிவுக்கு வந்தபோதிலும், தமிழக மீனவா்களின் அவல நிலை தொடா்கிறது. இதனால், இந்த விவகாரத்தில் நிரந்தரத் தீா்வு அவசியமாகும்’ என்றாா்.
அப்போது, நீதிபதிகள் அமா்வு, ‘உங்கள் மனுவில் கூறப்பட்டுள்ள மீனவா்கள் பத்திரமாக மீட்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகள் சம்பந்தப்பட்ட சா்வதேச எல்லை விவகாரமாகும் இது. இதில் நீதிமன்றம் தலையிட்டு நிரந்தர தீா்வை இறுதி செய்யும் முடிவை எடுக்க முடியாது. இதனால், இந்த மனு முடித்துவைக்கப்படுகிறது’ என்று தெரிவித்தது.