தமிழக ஆளுநரை நீக்க வேண்டும்: திமுக கூட்டணி எம்.பி.க்கள் மனு
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை ஆளுநர் பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை ஆளுநர் பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கையொப்பமிட்ட மனு குடியரசுத் தலைவர் மாளிகையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய அரசியலமைப்புச் சட்டம் மாநிலத்தின் நிர்வாக அதிகாரம் ஆளுநரிடம் உள்ளதாகத் தெரிவிக்கிறது. ஆளுநர், தனது அதிகாரத்தை முதல்வர் தலைமையிலான அமைச்சரவைக் குழுவின் ஆலோசனை மற்றும் அறிவுரைப்படியே பயன்படுத்த வேண்டும். அரசியல் சார்புத்தன்மை கொண்டவராக ஆளுநர் மாறுவாரேயானால் அந்தப் பதவியில் அவர் தொடரும் தகுதியை இழந்துவிடுகிறார்.
தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த 10 மாதங்களாக, இச்சட்ட வரைவு ஆளுநர் அலுவலகத்தில் பரிசீலிக்கப்படாமல் இருக்கிறது. இதேபோல, 2021-இல் தமிழ்நாடு இளநிலை மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டம் (நீட் விலக்கு சட்டவரைவு) தமிழக சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்காமல் பலமாத காலம் காலந்தாழ்த்தினார். பின்னர், அதை சட்டப் பேரவைக்கே திருப்பி அனுப்பினார். ஆளுநரின் நடவடிக்கையால், நீட் விலக்கு சட்டவரைவு மீண்டும் சட்டப்பேரவையில் இயற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தாம் வகிக்கும் ஆளுநர் பொறுப்புக்குச் சிறிதும் பொருத்தமற்ற வகையில் ஆர்.என். ரவி பேசி வருகிறார். அரசியல் சட்டப்பிரிவு 159-இன் கீழ் எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாணத்தை மீறி மாநிலத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக ஆளுநர் இருக்கிறார். அப்பொறுப்பிலிருந்து அவர் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து, திமுக கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் மனுவை அளிப்பார்கள் எனக் கூறப்பட்டது. பின்னர், கட்சி அலுவலர்கள் மூலம் குடியரசுத் தலைவர் மாளிகையில் ஒப்படைக்கப்பட்டதாக தகவல் வெளியானது.