இந்தியா

பதஞ்சலியின் 5 மருந்துகளுக்குத் தடை! என்ன காரணம்? 

DIN

பதஞ்சலியின் 5 மருந்துப் பொருள்களுக்கு தடை விதித்து உத்தரகண்ட் மாநில ஆயுர்வேத மற்றும் யுனானி கட்டுப்பாட்டு அமைப்பு உத்தரவிட்டுள்ளது. 

யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் திவ்யா பார்மசியின் மதுக்ரிட், ஐக்ரிட், தைரோகிரிட், பிபிகிரிட் மற்றும் லிப்பிடோம் (Madhugrit, Eyegrit, Thyrogrit, BPgrit and Lipidom) ஆகிய 5 மருந்துப்பொருள்களின் உற்பத்தியை நிறுத்துமாறு உத்தரகண்ட் ஆயுர்வேத மற்றும் யுனானி கட்டுப்பாட்டு இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த 5 மருந்துகளும் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், தைராய்டு, குளுக்கோமா எனும் கண் நோய், அதிக கொலஸ்ட்ரால் ஆகியவற்றுக்காக பயன்பாட்டில் உள்ளது. 

பதஞ்சலி நிறுவனம் தவறான விளம்பரங்களை விளம்பரப்படுத்தியதால் இந்த 5 மருந்துகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக உத்தரகண்ட் ஆயுர்வேத மற்றும் யுனானி சர்வீசஸ் உரிம அதிகாரி டாக்டர் ஜி.சி.எஸ். ஜங்பாங்கி குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், இந்த மருந்துகளின் தயாரிப்பை மதிப்பாய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஒப்புதல் கிடைக்கும்வரை, 5 மருந்துகளின் உற்பத்தியை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

இது தொடர்பாக பதஞ்சலி நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தவறான வழியிலான/ ஆட்சேபனைக்குரிய இந்த மருந்து குறித்த விளம்பரங்களை உடனடியாக ஊடகங்களில் இருந்து நீக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

கேரளத்தைச் சேர்ந்த மருத்துவர் கே.வி.பாபுவின் புகாரின்படி மாநில ஆயுர்வேத மற்றும் யுனானி சேவை அமைப்பு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 

குளுக்கோமா, கண்புரை மற்றும் பல கண் பிரச்னைகளுக்கு பதஞ்சலி தயாரிப்பு கண் சொட்டு மருந்து பயனுள்ளதாக இருக்கும் என விளம்பரம் செய்வதாகவும் இந்த சிக்கல்களுக்கு கண் சொட்டு மருந்து பயன்தராது, மாறாக சொட்டு மருந்தை பயன்படுத்தினால் குருட்டுத் தன்மை ஏற்படும் என்று மருத்துவர் கே.வி.பாபு குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற இதர மருந்துகள் குறித்த விளம்பரமும் மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகத் புகார் தெரிவித்துள்ளார். 

அதேநேரத்தில் நிறுவனம் தரப்பில், 'பதஞ்சலியின் அனைத்து தயாரிப்புகளும் மருந்துகளும் பரிந்துரைக்கப்பட்ட தரங்களைப் பின்பற்றி, 500-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளின் உதவியுடன் மிக உயர்ந்த ஆராய்ச்சி மற்றும் தரத்துடன் அனைத்து சட்டப்பூர்வ செயல்முறைகள் மற்றும் சர்வதேச தரத்தை பூர்த்தி செய்கின்றன. 

எனினும், நிறுவனம் தனது தவறை சரிசெய்து, நிறுவனத்துக்கு எதிராக சதியில் ஈடுபட்ட நபர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும்' என்று கூறியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 08.05.2024

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

லக்னௌ டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

ரோஜா நிறக் காரிகை!

SCROLL FOR NEXT