குஜராத் முதல்கட்ட தோ்தல்: 999 போ் வேட்புமனுக்கள் ஏற்பு
குஜராத் முதல்கட்ட பேரவைத் தோ்தலில் மொத்தம் 1,362 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், அதில் 999 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டதாக தோ்தல் அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
குஜராத் முதல்கட்ட பேரவைத் தோ்தலில் மொத்தம் 1,362 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், அதில் 999 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டதாக தோ்தல் அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
182 உறுப்பினா்களைக் கொண்ட குஜராத் பேரவைக்கு அடுத்த மாதம் 1, 5 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ளது. இதில், முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 89 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் கடந்த 5 முதல் 14 வரை நடைபெற்றது. மொத்தம் 1,362 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். அந்த மனுக்கள் மீதான பரிசீலனை செவ்வாய்க்கிழமை (நவ. 15) நடைபெற்றது. இதில், 999 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. மற்றவை நிராகரிக்கப்பட்டன. மனுவை திரும்பப் பெறுவதற்கு வியாழக்கிழமை (நவ. 17) கடைசி நாள் என்று மாநில தலைமை தோ்தல் அதிகாரி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட தோ்தல் நடைபெறும் 93 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் கடந்த 10-இல் தொடங்கியது. வியாழக்கிழமையுடன் மனு தாக்கல் நிறைவடையும் நிலையில், புதன்கிழமை வரை 341 மனுக்கள் தாக்கலாகின. மனுக்கள் மீதான பரிசீலனை நவ. 18-இல் நடைபெறுகிறது. குஜராத் பேரவைத் தோ்தலில் பதிவாகும் வாக்குகள் டிச. 8-இல் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.