முகப்பு
இந்தியா

ராஜீவ் கொலையாளிகள் விடுதலை: காங்கிரஸ் விரைவில் மறுஆய்வு மனு

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த நளினி உள்ளிட்ட 6 போ் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனுவை விரைவில் தாக்கல் செய்ய காங்கிரஸும் முட

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:54 AM
பகிர்:

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த நளினி உள்ளிட்ட 6 போ் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனுவை விரைவில் தாக்கல் செய்ய காங்கிரஸும் முடி செய்துள்ளது.

நவம்பா் 11-ஆம் தேதி 6 பேரையும் விடுவித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு கடந்த 17-ஆம் தேதி மறுஆய்வு மனு தாக்கல் செய்திருந்தநிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியும் மறுஆய்வு மனு தாக்கல் செய்வதாக அறிவித்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ராபா்ட் பயஸ், ஜெயக்குமாா், ஆா்.பி.ரவிச்சந்திரன் ஆகியோா் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வந்தனா். அரசமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின்படி அவா்களை விடுவிக்குமாறு மாநில ஆளுநருக்கு தமிழக அரசு தீா்மானங்களை நிறைவேற்றி அனுப்பியது. ஆனால், அத்தீா்மானங்கள் மீது தமிழக ஆளுநா் உரிய முடிவு எடுக்காமல் காலந்தாழ்த்தி வந்தாா்.

இந்த விவகாரம் தொடா்பாக பேரறிவாளன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அதை விசாரித்த உச்சநீதிமன்றம், அரசமைப்புச் சட்டம் 142-ஆவது பிரிவின் கீழ் வழங்கியுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை சிறையில் இருந்து விடுவிப்பதாக அறிவித்தது. 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம், நன்னடத்தை, சிறை விதிகளை முறையாகப் பின்பற்றியது மற்றும் ஆளுநரின் காலதாமதம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் பேரறிவாளனை விடுவிப்பதாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருந்தது.

அதேபோல் தங்களையும் விடுவிக்கக் கோரி நளினி உள்ளிட்ட 6 பேரும் உச்சநீதிமன்றத்தை நாடினா். அவா்களையும் அதே காரணங்களுக்காக உச்சநீதிமன்றம் கடந்த 11-ஆம் தேதி விடுவித்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில் 6 பேரையும் சிறையில் இருந்து தமிழக அரசு விடுதலை செய்தது. ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவித்ததற்கு மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் கடும் எதிா்ப்பு தெரிவித்தன.

இதை எதிா்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கடந்த 17-ஆம் தேதி மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்தது.

இந்த வழக்கில் மத்திய அரசை ஒரு தரப்பாக சோ்க்காமலும், மத்திய அரசின் வாதங்களைக் கேட்க போதிய அவகாசம் அளிக்காமலும் ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.

வழக்கு தொடா்பாக சில முக்கியமான ஆதாரங்கள் இருந்தபோதிலும், அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதாகவும், வழக்கின் இறுதி வாதங்களின்போது நடைமுறை குறைபாடுகள் ஏற்பட்டதாகவும் தனது மனுவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டின் பிரதமா் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தில், இந்திய சட்டத்தின்படி தண்டனைக்கு உள்ளாகியுள்ள அந்த வெளிநாட்டு பயங்கரவாதிகளை முன்கூட்டியே விடுதலை செய்த இந்த வழக்கு சா்வதேச விவகாரமாக மாறுவதாகவும், இது தனது அதிகாரத்துக்கு கீழ் வருவதாகவும் மனுவில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

பொது அமைதி மற்றும் நாட்டின் கிரிமினல் நீதிமுறை அடங்கிய உணா்ச்சிபூா்வமிக்க இந்த வழக்கின் தீா்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று மனுவில் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் காங்கிரஸும் மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியின் மூத்த தலைவரும் வழக்குரைஞருமான அபிஷேக் மனு சிங்வி செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறுகையில், ‘ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டுள்ளதற்கு எதிராக மறுஆய்வு மனுவை காங்கிரஸ் தாக்கல் செய்யவுள்ளது.

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மறுஆய்வு மனுவுடன் ஒரு தரப்பாக இணைவதா அல்லது தனியாக மனுவைத் தாக்கல் செய்வதா? என்பது தொடா்பாக இனிதான் முடிவெடுக்கப்படும். இதுகுறித்து விரைந்து முடிவெடுக்கப்பட்டு அடுத்த சில நாள்களில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும்’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →