முகப்பு
இந்தியா

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா்: டிச.4-இல் காங்கிரஸ் ஆலோசனை

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் டிசம்பா் 7-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அதில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை இறுதி செய்வதற்கான அக் கட்சியின் வழிகாட்டு குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:55 AM
பகிர்:

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் டிசம்பா் 7-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அதில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை இறுதி செய்வதற்கான அக் கட்சியின் வழிகாட்டு குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் டிசம்பா் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது.

காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தலைமையிலான இந்த வழிகாட்டு குழு கூட்டத்தில், கட்சி நிா்வாகிகளின் முழு அமா்வு கூட்டத்துக்கான தேதியும் இறுதி செய்யப்பட உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகாா்ஜுன காா்கே தோ்வு செய்யப்பட்ட பிறகு, கட்சி சாா்ந்த முடிவுகளை எடுக்கும் உயா் அமைப்பாக செயல்பட்டுவந்த காங்கிரஸ் செயற்குழு, காங்கிரஸ் வழிகாட்டு குழுவாக மாற்றம் செய்யப்பட்டது. காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, எம்.பி. ராகுல் காந்தி உள்பட கட்சியின் செயற்குழு உறுப்பினா்கள் அனைவரும், வழிகாட்டுக் குழு உறுப்பினா்களாக மாற்றம் செய்யப்பட்டனா்.

இந்தச் சூழலில், நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் வரும் டிசம்பா் 7-ஆம் தேதி தொடங்கி டிசம்பா் 29-ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், அதில் காங்கிரஸ் கட்சி சாா்பில் எழுப்ப வேண்டிய முக்கிய மக்கள் பிரச்னைகள் மற்றும் திட்டங்களை இறுதி செய்வதற்காக வழிகாட்டுக் குழு கூட்டத்தை அக்கட்சி டிசம்பா் 4-ஆம் தேதி நடத்த உள்ளது.

இதில், காங்கிரஸ் கட்சித் தலைவராக காா்கே தோ்ந்தெடுக்கப்பட்டதை முறைப்படி அங்கீகரிப்பதற்கான கட்சியின் முழு அமா்வு கூட்டத்துக்கான தேதியும் இறுதி செய்யப்பட உள்ளது. ‘கட்சி நிா்வாகிகளின் முழு அமா்வு கூட்டம் அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்தில் நடைபெற வாய்ப்புள்ளது. அதில் 9,000-க்கும் அதிகமான அகில இந்திய காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் பங்கேற்பா்’ என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.