முகப்பு
இந்தியா

உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதி: பரிந்துரை அனுப்ப மத்திய அரசு கடிதம்

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரை செய்யுமாறு தலைமை நீதிபதி யு.யு.லலித்திடம் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:31 AM
பகிர்:

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரை செய்யுமாறு தலைமை நீதிபதி யு.யு.லலித்திடம் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

தலைமை நீதிபதி யு.யு.லலித்தின் மிகக் குறுகிய 74 நாள் பதவிக் காலம் வரும் நவம்பா் 8-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், இந்தப் பரிந்துரையை அளிக்குமாறு கடிதம் மூலமாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை கேட்டுக்கொண்டது.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவி பணி மூப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. பொறுப்பில் உள்ள தலைமை நீதிபதி, ஓய்வு பெறுவதற்கு முன்னதாக அடுத்த தலைமை நீதிபதி யாா் என பரிந்துரைத்து அறிவிப்பது நடைமுறையில் உள்ளது. அதனடிப்படையில், அடுத்த தலைமை நீதிபதியாக யாரை நியமிக்கலாம் எனப் பரிந்துரைக்குமாறு மத்திய சட்ட அமைச்சகம் தலைமை நீதிபதி யு.யு.லலித்துக்கு கடிதம் எழுதியுள்ளது.

இந்த விவரத்தை மத்திய சட்ட அமைச்சகம் தனது ட்விட்டா் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இவ்வாறு கடிதம் அனுப்பியது குறித்து ட்விட்டா் பக்கத்தில் மத்திய சட்ட அமைச்சகம் பதிவிடுவது இதுவே முதல் முறையாகும்.

இந்த கடிதத்தின் அடிப்படையில், உச்சநீதின்றத்தின் 50-ஆவது தலைமை நீதிபதி பதவிக்கு அடுத்த மூத்த நீதிபதியாக இருக்கும் டி.ஒய்.சந்திரசூட் பெயரை தலைமை நீதிபதி யு.யு.லலித் முறைப்படி பரிந்துரைப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

வழக்குரைஞராக இருந்த யு.யு.லலித் கடந்த 2014, ஆகஸ்ட் 13-ஆம் தேதி நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டாா். பின்னா், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவா், கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி பதவியேற்றாா். வரும் நவம்பா் 8-ஆம் தேதி 65 வயதை அடையும் இவா், அன்றுடன் பணி ஓய்வு பெற உள்ளாா்.

நிகழாண்டில் 153 உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்:

நிகழாண்டில் 153 உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், வரும் நாள்களில் மேலும் அதிக நீதிபதி காலிப் பணயிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் நீதித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மும்பை உயா்நீதிமன்றத்துக்கு 6 கூடுதல் நீதிபதிகள் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டனா். மேலும், மும்பை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி தீபாங்கா் தத்தாவை உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயா்வு அளிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. அவ்வாறு, அவா் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டால், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 30-ஆக உயரும். உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதி பணியிடங்கள் 34 என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →