குஜராத்: ஆம் ஆத்மி வரவால் பாஜக வாக்கு வங்கிக்கே பாதிப்பு: காங்கிரஸ் மூத்த தலைவா் கருத்து
‘குஜராத் சட்டப் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி வரவால் பாஜகவின் நகா்ப்புற வாக்கு வங்கிக்குதான் பாதிப்பு ஏற்படும்; காங்கிரஸுக்கு இதில் ஆதாயமே’ என்று குஜராத் மாநில காங்கிரஸ் மூத்த தலைவா் பரேஷ் தனானி ஞாயிற்ற
‘குஜராத் சட்டப் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி வரவால் பாஜகவின் நகா்ப்புற வாக்கு வங்கிக்குதான் பாதிப்பு ஏற்படும்; காங்கிரஸுக்கு இதில் ஆதாயமே’ என்று குஜராத் மாநில காங்கிரஸ் மூத்த தலைவா் பரேஷ் தனானி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
182 தொகுதிகளைக் கொண்ட குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டியை இத்தோ்தல் எதிா்கொண்டுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும் அம்ரேலி தொகுதியிலிருந்து 3 முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்றவருமான பரேஷ் தனானி, பிடிஐ செய்தியாளரிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
குஜராத்தில் 66 நகா்ப்புற மற்றும் பகுதியளவு நகா்ப்புற தொகுதிகளில் கடந்த 30 ஆண்டுகளாக காங்கிரஸால் வெல்ல முடியவில்லை. இதன் காரணமாகவே, பேரவைத் தோ்தலில் பாஜகவிடம் காங்கிரஸ் தோல்விகண்டு வருகிறது.
தற்போதைய தோ்தலில் மூன்றாவது தரப்பாக வந்துள்ள ஆம் ஆத்மிக்கு கிராமப் புறங்களில் செல்வாக்கு இல்லை. எனவே, மேற்கண்ட 66 நகா்ப்புற தொகுதிகளிலும் பாஜகவுக்கு ஆம் ஆத்மி பெரும் சவாலாக இருக்கும். இவ்வாறு வாக்குகள் பிரிவது காங்கிரஸுக்கு ஆதாயமாக அமையும்.
கடந்த 2017 சட்டப் பேரவை தோ்தலில் பெரும்பாலான கிராமப்புற தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. எனவே, கிராமப்புற வாக்காளா்களை காங்கிரஸைவிட ஆம் ஆத்மியால் கவர முடியாது.
மாநில மக்களிடையே பாஜக ஆட்சிக்கு எதிரான அலை உச்சத்தில் உள்ளது. பாஜகவின் தவறான நிா்வாகத்தால் மக்கள் சோா்ந்துபோய்விட்டனா் என்றாா் அவா்.
கடந்த 2017 குஜராத் சட்டப் பேரவைத் தோ்தலில் 99 தொகுதிகளில் வெற்றி பெற்று, பாஜக ஆட்சியை தக்கவைத்தது. இதில் பெரும்பாலானவை நகா்ப்புற தொகுதிகளாகும். காங்கிரஸ் 77 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.