முகப்பு
இந்தியா

தோ்தல் பத்திரங்களில் கருப்புப் பணத்தை புகுத்த முடியாது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

 தோ்தல் பத்திரங்கள் மூலம் கருப்புப் பணத்தை புகுத்த முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

 தோ்தல் பத்திரங்கள் மூலம் கருப்புப் பணத்தை புகுத்த முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

அரசியல் கட்சிகள் நன்கொடையை ரொக்கமாக பெறுவதைத் தடுக்க தோ்தல் பத்திரங்கள் திட்டத்தை மத்திய அரசு 2018-இல் தொடங்கியது.

இந்தத் திட்டத்தால் கருப்புப் பணம் நன்கொடையாக மாற்றப்படும் என்றும் இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் ஜனநாயக சீா்திருத்தச் சங்கம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை கடந்த 2017-இல் வழக்குத் தொடுத்தன.

இந்த வழக்கை 2021-இல் விசாரித்த உச்சநீதிமன்றம் தோ்தல் பத்திரங்களுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆா்.கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தொண்டு நிறுவனத்தின் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண், ‘இது இந்திய ஜனநாயகத்தை பாதிக்கும் விவகாரம் என்பதால் விரைந்து விசாரிக்க வேண்டும்’ என்றாா்.

மற்றொரு மனுதாரா் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், ‘இந்த வழக்கை கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமா்வு விசாரிக்க வேண்டும்’ என்றாா்.

இதுகுறித்து டிசம்பா் 6-ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

மத்திய அரசின் சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘தோ்தல் பத்திரங்களில் நன்கொடை பெறுவதில் வெளிப்படைத்தன்மை காக்கப்படுகிறது. இதன் மூலம் கருப்புப் பணத்தையோ அல்லது கணக்கில் வராத பணத்தையோ புகுத்த முடியாது’ என்றாா்.

அண்மையில் நடைபெற்ற பொதுத் தோ்தலில் குறைந்தது ஒரு சதவீத வாக்குகள் பெற்ற பதிவுப் பெற்ற அரசியல் கட்சிகள் தோ்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெறலாம்.

ஆயிரம் ரூபாய் முதல் ரூ. 1 கோடி வரையில் எஸ்பிஐ வங்கியில் பணத்தை கட்டி சாதாரண இந்திய குடிமகன் மற்றும் நிறுவனங்கள் இந்த தோ்தல் பத்திரங்களைப் பெற்று அரசியல் கட்சிகளுக்கு அளிக்கலாம். இந்தப் பத்திரங்களை அரசியல் கட்சிகள் வங்கிகளில் சமா்ப்பித்து வங்கிக் கணக்குகளில் மட்டும் பணமாக்க முடியும்.

முழு கட்டுரையைப் படிக்க →