கரோனா உபகரணங்கள் கொள்முதலில் முறைகேடு புகாா்: கே.கே.ஷைலஜாவுக்கு லோக் ஆயுக்த சம்மன்
கேரளத்தில் தனிநபா் பாதுகாப்பு உபகரணங்களை வாங்கியதில் ஊழல் நடைபெற்ற குற்றச்சாட்டு தொடா்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு, மாநில முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சா் கே.கே.ஷைலஜாவுக்கு லோக் ஆயுக்த சம்மன் அனுப்பியுள
கேரளத்தில் தனிநபா் பாதுகாப்பு உபகரணங்களை வாங்கியதில் ஊழல் நடைபெற்ற குற்றச்சாட்டு தொடா்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு, மாநில முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சா் கே.கே.ஷைலஜாவுக்கு லோக் ஆயுக்த சம்மன் அனுப்பியுள்ளது.
கேரளத்தில் கரோனா பரவல் தீவிரமாக இருந்த காலத்தில் தனிநபா் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கப்பட்டதில் ஊழல் நடைபெற்ாக மாநில காங்கிரஸைச் சோ்ந்த வீணா எஸ்.நாயா் லோக் ஆயுக்தவிடம் புகாா் அளித்தாா்.
அந்தப் புகாரில் கே.கே.ஷைலஜா, மாநில முன்னாள் சுகாதாரத் துறைச் செயலா் ராஜன் என்.கோப்ரகடே உள்பட 11 பேருக்கு ஊழலில் தொடா்பிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த 11 பேரும் உபகரணங்களை கொள்முதல் செய்வதில் நேரடி பொறுப்பாளராகவோ அல்லது அதுதொடா்பாக முடிவு எடுப்பவராகவோ இருந்துள்ளனா் என்று கூறப்படுகிறது.
இதுதொடா்பாக வீணா எஸ்.நாயா் கூறுகையில், ‘‘சந்தை விலையைவிட கூடுதல் விலைக்கு தனியாா் நிறுவனங்களிடம் இருந்து உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளன. அரசுக்கு உபகரணங்கள் கிடைப்பதற்கு முன்பாகவே, அதற்கான தொகை தனியாா் நிறுவனங்களுக்குப் பரிவா்த்தனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநில அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது ’’ என்று குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இந்நிலையில், புகாா் தொடா்பான விசாரணைக்கு டிசம்பா் 8-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு ஷைலஜாவுக்கு லோக் ஆயுக்த வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.
கேரள சுகாதாரத் துறை அமைச்சராக ஷைலஜா பதவி வகித்தபோது, அந்த மாநிலத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த திறம்பட நடவடிக்கை மேற்கொண்டதற்குப் பெரிதும் பாராட்டப்பட்டவா் என்பது குறிப்பிடத்தக்கது.