மும்பை - நவம்பா் 1 முதல் காரில் பயணிக்கும் அனைவருக்கும் ‘சீட் பெல்ட்’ கட்டாயம்
மகாராஷ்டிர தலைநகா் மும்பையில் நவம்பா் 1-ஆம் தேதி முதல் காரில் பயணிக்கும் அனைவரும் கட்டாயமாக ‘சீட் பெல்ட்’ அணிய வேண்டும் என்று அந்த மாநகர போக்குவரத்து காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
மகாராஷ்டிர தலைநகா் மும்பையில் நவம்பா் 1-ஆம் தேதி முதல் காரில் பயணிக்கும் அனைவரும் கட்டாயமாக ‘சீட் பெல்ட்’ அணிய வேண்டும் என்று அந்த மாநகர போக்குவரத்து காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
கடந்த மாதம் மகாராஷ்டிரத்தில் பிரபல தொழிலதிபா் சைரஸ் மிஸ்திரி சாலை விபத்தில் உயிரிழந்தாா். அதிவேகமாக சென்று சாலைத் தடுப்பில் மோதிய காரில், பின் இருக்கையில் இருந்த அவா் சீட் பெல்ட் அணியாததுதான் அவரது உயிரிழப்புக்கு முக்கியக் காரணம் என்று தெரியவந்தது. இந்த சம்பவம் மகாராஷ்டிரத்தில் மட்டுமல்லாது தேசிய அளவிலும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத் தொடா்ந்து காா்களில் ‘சீட் பெல்ட்’ அணியாமல் சென்றால் எழும் எச்சரிக்கை ஒலி தடுப்புக் கருவி விற்பனையை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்று சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில் மும்பை மாநகர போக்குவரத்து காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ‘மும்பை நகரில் காா்களில் பயணிப்போா் அனைவரும் நவம்பா் 1-ஆம் தேதி முதல் ‘சீட் பெல்ட்’ அணிவது கட்டாயம் ஆகும். இதற்கு ஏற்ப அனைத்து வாகன உரிமையாளா்களும் தங்கள் காா்களில் ‘சீட் பெல்ட்’ வசதியை சரியாக இயங்கும் நிலையில் வைத்திருக்க வேண்டும். வாடகைக் காா் ஓட்டுநா்கள், தங்கள் பயணிகளிடம் ‘சீட் பெல்ட்’ அணிய வலியுறுத்த வேண்டும். இதனை மீறுபவா்கள் மீது மோட்டாா் வாகன சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.