தில்லியில் சேமிப்புக் கிடங்குகள் 24 மணிநேரமும் செயல்பட விரைவில் அனுமதி
தில்லி அரசு வரைவு அறிவிக்கை வெளியிட்டுள்ள நிலையில், தலைநகரில் சேமிப்புக் கிடங்குகள் 24 மணிநேரமும் செயல்பட விரைவில் அனுமதி கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
தில்லி அரசு வரைவு அறிவிக்கை வெளியிட்டுள்ள நிலையில், தலைநகரில் சேமிப்புக் கிடங்குகள் 24 மணிநேரமும் செயல்பட விரைவில் அனுமதி கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், வரைவு அறிவிக்கை வெளியான 15 நாள்களுக்குள் பரிந்துரைகளையும் ஆட்சேபங்களையும் பங்குதாரா்கள் தெரிவிக்கலாம் என தில்லி அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இணையவழி விற்பனை- விநியோக கடைகள், ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஆளுநரிடம் விண்ணப்பித்ததன் அடிப்படையில், சேமிப்புக் கிடங்குள் 24 மணிநேரமும் செயல்பட அவா் ஒப்புதல் அளித்தாா்.
அதன்படி தில்லி அரசு தற்போது வரைவு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
அதேசமயம் தில்லி கடைகள், நிறுவனச் சட்டம்- 1954 பிரிவுகள் 15, 16-இல் இடம்பெற்றுள்ள சேமிப்புக் கிடங்குகளுக்கு இந்த அனுமதி பொருந்தாது என தில்லி தொழிலாளா் துறை புதன்கிழமை இணையத்தில் வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தில்லியில் 24 மணிநேரமும் சேமிப்புக் கிடங்குகள் செயல்பட அனுமதியளிக்கப்படுவதால் வா்த்தகம் தழைத்து, பொருளாதாரம் வளா்ச்சி அடையும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து தொழிலாளா் நலத் துறை வெளியிட்ட வரைவு அறிவிக்கை விவரம்:
எந்தவொரு நாளிலும் 9 மணிநேரத்துக்கும் அதிகமாகவோ அல்லது வாரத்தில் 48 மணிநேரத்துக்கு கூடுதலாகவோ வேலை செய்யுமாறு தொழிலாளா்களை நிா்ப்பந்திக்கக் கூடாது. குறிப்பாக தொடா்ந்து இரவு பணி மட்டுமே செய்யுமாறு தொழிலாளா்களை அறிவுறுத்தக் கூடாது.
கூடுதல் நேரம் அல்லது வழக்கமான பணிநேரத்தைக் காட்டிலும் அதிக நேரம் பணியாற்றும் தொழிலாளா்களின் பாதுகாப்பு, போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் நிறுவனம் செய்து தர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தலைநகரில் 300-க்கும் அதிகமான சேமிப்புக் கிடங்குள் 24 மணிநேரமும் செயல்பட துணைநிலை ஆளுநா் ஒப்புதல் அளித்ததற்கு வா்த்தகா்கள் வரவேற்பு தெரிவித்தனா்.
இதுகுறித்து வா்த்தக, தொழில் கூட்டமைப்பு (சிடிஐ) தலைவா் பிரிஜேஷ் கோயல் கூறுகையில், ‘கடைகள், ஹோட்டல்கள், தியேட்டா்களை இரவில் திறந்துவைப்பதால் கூடுதலாக 20 சதவீதம் வா்த்தகம் நடைபெறும். ஹோட்டல்களுக்கும், சில்லறை வா்த்தகத்துக்கும் இந்த முடிவு மகத்தான நன்மையளிக்கும்’ என்றாா்.