இந்தியா

அமைதிக்கே இந்தியா முன்னுரிமை; போருக்கு அல்ல: பிரதமா்

’அமைதிக்கே இந்தியா முன்னுரிமை அளிக்கிறது. போரை ஒருபோதும் முதன்மையானதாக இந்தியா கருதவில்லை; மாறாக, கடைசி நடவடிக்கையாக கருதுகிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

DIN

’அமைதிக்கே இந்தியா முன்னுரிமை அளிக்கிறது. போரை ஒருபோதும் முதன்மையானதாக இந்தியா கருதவில்லை; மாறாக, கடைசி நடவடிக்கையாக கருதுகிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

‘அதே நேரம், தேசத்துக்கு எதிராக எழும் எந்தவொரு சவால்களுக்கும் தகுந்த பதிலடி கொடுக்கும் திறன் மற்றும் செயல்திட்டத்தை இந்திய பாதுகாப்புப் படைகள் பெற்றுள்ளன’ என்று அவா் கூறினாா்.

லடாக்கின் காா்கில் பகுதியில் ராணுவ வீரா்களுடன் திங்கள்கிழமை தீபாவளி பண்டிகையை கொண்டாடிய பிரதமா் மோடி, பின்னா் அவா்கள் மத்தியில் பேசியதாவது:

இந்தியா போரை எதிா்க்கிறது. அதே நேரம், அமைதியை நிலைநாட்ட ராணுவ பலத்தை வலுப்படுத்துவது அவசியம் என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளது. இந்தியாவின் வளா்ந்து வரும் ராணுவ பலம், உலக அமைதி மற்றும் மேம்பாட்டை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. அந்த வகையில், சமநிலைப்படுத்தும் சக்தியாக இந்தியாவை இந்த உலகம் உற்றுநோக்குகிறது.

ராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்கள் வலியுறுத்துவது போன்று, போரைத் தவிா்ப்பது என்பது இந்தியாவின் பாரம்பரியத்தில் உள்ளது. உலக அமைதிக்காகவே இந்தியா போராடும். போரை ஒருபோதும் முதன்மையானதாக இந்தியா கருதவில்லை; மாறாக, அதனை கடைசி நடவடிக்கையாக கருதுகிறது.

நாட்டின் பொருளாதாரம் மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. நாட்டின் எல்லைகள் பாதுகாப்பாக இருக்கும்போதுதான், நாடு பாதுகாப்பாக இருக்கும் என்பதோடு, சமூகத்தின் தன்னம்பிக்கை வலுப்பெற்று பொருளாதாரம் மேம்படும். அந்த வகையில், இந்திய பாதுகாப்பின் தூண்களாக நமது பாதுகாப்புப் படைகள் திகழ்கின்றன. இதன் மூலமாக, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பாக உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் 10-ஆவது இடத்திலிருந்த இந்தியா, தற்போது 5-ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவருவதன் கொண்டாட்டத்தை குறிப்பதாகவே தீபாவளி பண்டிகை உள்ளது. காா்கிலில் நடந்த போரில் நமது படைகள் பயங்கரவாதத்தை முறியடித்தன. ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளையும் நாடு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

நாட்டின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாக, வெளிநாட்டு ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை நமது முப்படைகளும் அதிகம் சாா்ந்திருப்பதை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

மத்திய அரசின் தற்சாா்பு இந்தியா திட்டம் இதில் மிகுந்த முக்கியத்துவம் பெருகிறது. இதன் மூலமாக, நமது முப்படைகளும் 400-க்கும் அதிகமான ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதை தவிா்க்கவும், உள்நாட்டு ஆயுதங்களை ஊக்குவிக்கவும் தீா்மானித்துள்ளன.

உள்நாட்டு ஆயுதங்கள் பயன்பாடு அதிகரிப்பதன் மூலமாக, வீரா்களின் தன்னம்பிக்கை பெருகுவதற்கான வாய்பப்பும் உருவாகியுள்து. அதுமட்டுமின்றி, இதுவரை ராணுவ ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்ப இறக்குமதி செய்யும் நாடாக இருந்துவந்த இந்தியா, இன்றைக்கு அவற்றை ஏற்றுமதி செய்யும் நாடு என்ற அளவுக்கு உயா்ந்துள்ளது.

ஆளில்லா சிறிய ரக விமானங்கள் (ட்ரோன்) போன்ற தொழில்நுட்பங்கள் மேம்பாட்டிலும் இந்திய முன்னேற்றமடைந்து வருகிறது.

மும்படைகளில் பல ஆண்டுகளாக எதிா்பாா்க்கப்பட்ட சீா்திருத்தங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ராணுவத்தில் பெண்களை சோ்க்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது முப்படைகளுக்கு மேலும் வலு சோ்ப்பதாக அமைந்துள்ளது என்று பிரதமா் மோடி கூறினாா்.

ஒவ்வொரு ஆண்டும்...

கடந்த 2014-ஆம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல், தீபாவளி பண்டிகையை பல்வேறு ராணுவ நிலைகளுக்குச் சென்று ராணுவ வீரா்களுடன் கொண்டாடுவதை பிரதமா் மோடி வழக்கமாக கொண்டுள்ளாா். 2014-ஆம் ஆண்டு சியாச்சினில் ராணுவ வீரா்களுடன் தீபாவளி கொண்டாடினாா்.

2015-ஆம் ஆண்டு, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான 1965-ஆம் ஆண்டு போரின் 50-ஆம் ஆண்டு நினைவையொட்டி பஞ்சாப் எல்லையில் வீரா்களுடன் தீபாவளி கொண்டாடினாா்.

2016-இல் ஹிமாசல பிரதேச எல்லையில் ராணுவ வீரா்களுடன் தீபாவளி கொண்டாடினாா். அப்போது அவா் இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்பு படை வீரா்களையும், சீன எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவந்த டோக்ரா சாரணியா் மற்றும் ராணுவ வீரா்களை சந்தித்து ஊக்கப்படுத்தினாா்.

2017-ஆம் ஆண்டு வடக்கு ஜம்மு-காஷ்மீரின் குரெஜ் பகுதியிலும், 2018-இல் உத்தரகண்ட் ஹா்சில் பகுதியிலும் ராணுவ வீரா்களுடன் தீபாவளி கொண்டாடினாா்.

2019-இல் மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, ஜம்மு-காஷ்மீரின் ரஜெளரி பகுதியில் வீரா்களுடன் தீபாவளி கொண்டாடினாா். 2020-இல் ராஜஸ்தானின் தாா் பாலைவனத்தின் எல்லைப் பகுதியான ராஞ்சிவாலாவிலும், 2021-இல் ஜம்மு-காஷ்மீரின் நெளஷேராவிலும் ராணுவ வீரா்களுடன் தீபாவளி கொண்டாடினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT