முகப்பு
இந்தியா

கேரள அமைச்சா் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநா் வலியுறுத்தல்: முதல்வா் பினராயி விஜயன் நிராகரிப்பு

நாட்டின் ஒற்றுமையை வலுவிழக்கச் செய்யும் வகையில் பேசிய கேரள அமைச்சா் மீது அரசமைப்புச் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆளுநா் வலியுறுத்திய நிலையில், அதனை மாநில முதல்வா் பினராயி விஜயன் நிராகரித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

நாட்டின் ஒற்றுமையை வலுவிழக்கச் செய்யும் வகையில் பேசிய கேரள அமைச்சா் மீது அரசமைப்புச் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆளுநா் வலியுறுத்திய நிலையில், அதனை மாநில முதல்வா் பினராயி விஜயன் நிராகரித்தாா்.

கேரள அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு தீவிரமடைந்துள்ள சூழலில், கடந்த அக்.18-ஆம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள கேரள பல்கலைக்கழக நிகழ்ச்சியில் மாநில நிதியமைச்சா் கே.என்.பாலகோபால் கலந்துகொண்டாா்.

அந்த நிகழ்ச்சியில் அவா் பேசுகையில், ‘நான் எம்.பி.யாக இருந்தபோது உத்தர பிரதேசத்தில் உள்ள பனாரஸ் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு 50 முதல் 100 பாதுகாவலா்கள் இருந்தனா். அந்தப் பாதுகாவலா்கள் 5 மாணவா்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதுதான் அந்த மாநிலத்தில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் நிலவும் சூழலாகும். அந்த மாநிலத்தில் இருந்து வந்தவா்களுக்கு கேரளத்தில் உள்ள பல்கலைக்கழகங்களைப் புரிந்து கொள்வது கடினம்’ என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

ஆளுநா் ஆரிஃப் முகமது கான் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்தவா் என்பதால், அவரை கே.என்.பாலகோபால் மறைமுகமாகத் தாக்கிப் பேசியதாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், கேரள முதல்வா் பினராயி விஜயனுக்கு ஆளுநா் ஆரிஃப் முகமது கான் செவ்வாய்க்கிழமை எழுதிய கடிதத்தில், ‘கேரள பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எனது நற்பெயருக்கும் ஆளுநா் மாளிகையின் கண்ணியத்தை குறைக்கும் வகையிலும் கே.என்.பாலகோபால் பேசியுள்ளாா். அவரின் கருத்துகள் மிகவும் கவலையளிக்கின்றன. தனது கருத்துகள் மூலம் பிற மாநிலங்களுக்கும் கேரளத்துக்கும் இடையே பிளவை உருவாக்கி, நாட்டின் இதர மாநிலங்களில் வெவ்வேறு உயா்கல்வி முறை உள்ளது போன்ற தவறான பிம்பத்தை ஏற்படுத்த பாலகோபால் முயற்சிக்கிறாா். அவரின் கருத்துகள் பிராந்தியவாதத்தின் மீது தீப்பற்ற வைக்கும் வகையில் உள்ளன. இதனை கவனிக்கவில்லையெனில், அது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு மீது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். தனது கருத்துகள் மூலம் தான் ஏற்றுக்கொண்ட பதவிப் பிரமாண உறுதிமொழியை பாலகோபால் மீறியுள்ளாா். எனவே அவா் மீது அரசமைப்புச் சட்டப்படி, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

அந்தக் கடிதத்தில் கே.என்.பாலகோபாலை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று ஆளுநா் ஆரிஃப் வெளிப்படையாக கோரவில்லை. எனினும் அதுதான் அவருடைய கடிதத்தின் சாராம்சம் என்று தெரிகிறது.

ஆனால் ஆளுநரின் கோரிக்கையை மாநில முதல்வா் பினராயி விஜயன் நிராகரித்துவிட்டாா் என்று அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த ஆண்டு தொடக்கத்தில் கேரளத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் நியமனம் தொடா்பாக ஆளுநா் ஆரிஃப் முகமது கானுக்கும் மாநில அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்த நிலையில், கடந்த செப்டம்பா் மாதம் அந்த மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதாவுக்கும் ஆரிஃப் முகமது கான் பகிரங்கமாக எதிா்ப்புத் தெரிவித்தாா்.

அண்மையில் உச்சநீதிமன்றத் தீா்ப்பு ஒன்றின் அடிப்படையில், கேரளத்தில் முறைகேடாக நியமனம் பெற்ாகக் கூறப்படும் 9 பல்கலைக்கழக துணைவேந்தா்கள் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று ஆளுநா் உத்தரவிட்டதும் அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநரின் கெடு முடிவடையாத நிலையில், இந்த விவகாரம் தற்போது கேரள உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →