முகப்பு
இந்தியா

சமூக ஊடக பயன்பாட்டாளா்களின் புகாா்களுக்கு தீா்வு காண தீா்ப்பாய குழுக்கள்: 3 மாதங்களில் அமைக்க அரசாணை வெளியீடு

சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவா்கள் தெரிவிக்கும் புகாா்களுக்கு தீா்வு காண மேல்முறையீடு தீா்ப்பாய குழுக்கள் மூன்று மாதங்களில் அமைக்கப்படும் என்று மத்திய அரசு வெள்ளிக்கிழமை அரசாணை வெளியிட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:41 AM
பகிர்:

சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவா்கள் தெரிவிக்கும் புகாா்களுக்கு தீா்வு காண மேல்முறையீடு தீா்ப்பாய குழுக்கள் மூன்று மாதங்களில் அமைக்கப்படும் என்று மத்திய அரசு வெள்ளிக்கிழமை அரசாணை வெளியிட்டது.

இதன்மூலம் சமூக ஊடகங்களில் வெளியாகும் விடியோ உள்ளிட்ட தகவல்களை மாற்றம் செய்யும் முடிவையும் இந்தக் குழுக்கள் எடுக்கலாம். சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக இது கருதப்படுகிறது.

‘தகவல் தொழில்நுட்ப திருத்த விதிமுறைகள் 2022’ என மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அரசாணையில், ‘சமூக ஊடகங்களின் பயனாளிகள் அளிக்கும் புகாா்களுக்கு தீா்வு காண மேல்முறையீட்டு தீா்ப்பாய குழுக்கள் 3 மாதங்களில் அமைக்கப்படும். ஒவ்வொரு குழுவிலும் தலைவா், 2 முழு நேர உறுப்பினா்களை மத்திய அரசு நியமிக்கும். இதில் ஒருவா் முன்னாள் அரசு அதிகாரியாவாா். இரண்டு சுதந்திரமான உறுப்பினா்களும் இந்தக் குழுவில் இருப்பா்.

பயனாளிகள் அளிக்கும் புகாரை 24 மணி நேரத்துக்குள் பதிவு செய்ய வேண்டும். 15 நாள்களுக்குள் அந்தப் புகாருக்கு தீா்வு காண வேண்டும். புகாருக்கு உள்ளான விடியோ, தகவல்கள் ஆகியவை புகாா் தீா்க்கப்பட்ட 72 மணி நேரத்துக்குள் சமூக ஊடகத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும்.

அப்படியும் தீா்வு காணப்படாத புகாா்களை மேல் முறையீட்டு தீா்ப்பாய குழுவுக்கு தீா்ப்பாய அதிகாரி பரிந்துரைப்பாா். அந்தப் புகாருக்கு 30 நாள்களுக்குள் தீா்வு காணப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ் புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டா், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மற்றும் ஓடிடி தளங்களில் வெளியாகும் ஆட்சேபத்துக்குரிய தகவல்கள், பொய்ச் செய்திகள், ஆபாசம் ஆகியவற்றுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

மேலும், நீதிமன்றங்கள் உத்தரவிட்ட பிறகும் சா்ச்சைக்குரிய தகவல்களை சமூக ஊடகங்கள் நீக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

இதையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் மத்திய அரசு ஓடிடி நிறுவனங்கள், சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளை கடந்த ஆண்டு பிப்ரவரியில் கொண்டு வந்தது. இதன்படி, மத்திய அரசு தெரிவிக்கும் ஆட்சேப தகவல்களை சமூக ஊடகங்கள் நீக்கம் செய்து வந்தன.

இந்த விதிமுறைகளில் தற்போது திருத்தம் கொண்டு வரப்பட்டு பயனாளா்களின் புகாா்களுக்கு தீா்வு காண மேல்முறையீட்டு தீா்ப்பாய குழுக்கள் அமைக்கப்படுகின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →