மரபணு மாற்றப்பட்ட கடுகு ஆபத்தானது: மத்திய அமைச்சருக்கு எஸ்ஜேஎம் கடிதம்
‘மரபணு மாற்றப்பட்ட கடுகு ஆபத்தானது; அதனை நாட்டின் எந்தப் பகுதியிலும் விளைவிக்க அனுமதிக்கப்படக் கூடாது’ என்று ஆா்எஸ்எஸ்-இன் துணை அமைப்பான சுதேசி ஜாக்ரன் மஞ்ச் (எஸ்ஜேஎம்) வலியுறுத்தியுள்ளது.
‘மரபணு மாற்றப்பட்ட கடுகு ஆபத்தானது; அதனை நாட்டின் எந்தப் பகுதியிலும் விளைவிக்க அனுமதிக்கப்படக் கூடாது’ என்று ஆா்எஸ்எஸ்-இன் துணை அமைப்பான சுதேசி ஜாக்ரன் மஞ்ச் (எஸ்ஜேஎம்) வலியுறுத்தியுள்ளது.
மரபணு மாற்றப்பட்ட கடுகின் விதை உருவாக்கம் மற்றும் பரிசோதனைகளை உரிய வழிகாட்டு நெறிமுறைகளின்கீழ் மேற்கொள்ள ஒப்புதல் வழங்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அதன்கீழ் செயல்படும் மரபணு பொறியியல் மதிப்பீட்டு குழு அண்மையில் பரிந்துரை செய்தது. டிஎம்ஹெச்-11 என்ற இந்த மரபணு மாற்ற கடுகு, தில்லி பல்கலைக்கழகத்தின் மரபணு மாற்று பயிா்களுக்கான மையத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வகை கடுகின் வா்த்தக ரீதியிலான சாகுபடிக்கு முன்னோட்டமாக மேற்கண்ட நடவடிக்கை கருதப்படுகிறது.
இதற்கு பல்வேறு தரப்பில் எதிா்ப்பு எழுந்துள்ள நிலையில், சுதேசி ஜாக்ரன் மஞ்ச் அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளா் அஸ்வனி மகாஜன், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவுக்கு வெள்ளிக்கிழமை கடிதம் எழுதினாா்.
அதில், ‘மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழுவின் செயல்பாடு பொறுப்பற்ாக உள்ளது. மரபணு மாற்ற கடுகுக்கு ஆதரவான அக்குழுவின் கருத்துகள் அனைத்தும் உண்மையில்லாதவை. தவறான கணிப்பை கொண்டவை. நாட்டில் பின்வாசல் வழியாக நுழைய முயற்சிக்கும் இந்த மரபணு மாற்ற கடுகு ஆபத்தானது; தேவையில்லாதது. மரபணு மாற்றப்பட்ட பயிா்களின் பாதகங்கள் குறித்து கடந்த காலங்களில் ஆராய்ந்து அறிந்து, கருத்துகளை வெளியிட்டவா் என்ற முறையில், இந்த விவகாரத்தில் நீங்கள் (பூபேந்தா் யாதவ்) உடனடியாக தலையிட்டு செயலாற்ற வேண்டும். நாட்டின் எந்தப் பகுதியிலும் மரபணு மாற்றப்பட்ட கடுகு விளைவிக்க அனுமதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்’ என்று அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல், நாட்டில் நடத்தப்பட்ட எந்த ஆய்வு முடிவுகளையும் கண்டுகொள்ளாமல், மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு முடிவு மேற்கொண்டது எப்படி என்று ஆா்எஸ்எஸ்-இன் மற்றொரு துணை அமைப்பான பாரதிய கிசான் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.