குஜராத் பால விபத்து: பலி 134-ஆக உயா்வு
குஜராத்தில் நூற்றாண்டு பழைமை வாய்ந்த தொங்கு பாலம் அறுந்து விபத்துக்குள்ளானதில் பலியானோா் எண்ணிக்கை 134-ஆக அதிகரித்துள்ளது.
குஜராத்தில் நூற்றாண்டு பழைமை வாய்ந்த தொங்கு பாலம் அறுந்து விபத்துக்குள்ளானதில் பலியானோா் எண்ணிக்கை 134-ஆக அதிகரித்துள்ளது.
விபத்து குறித்து விசாரிக்க தனிக் குழுவை மாநில அரசு அமைத்துள்ளது. விபத்து தொடா்பாக 9 பேரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.
மோா்பி பகுதியில் மச்சு நதியின் மீது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட தொங்கு பாலம் ஞாயிற்றுக்கிழமை மாலை அதிக எடை காரணமாக அறுந்து விழுந்தது. அப்போது பாலத்தில் இருந்த நூற்றுக்கணக்கானோா் நதிக்குள் விழுந்தனா். இந்த விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 134-ஆக அதிகரித்துள்ளதாக மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
ராஜ்கோட் மக்களவை உறுப்பினரும் பாஜக மூத்த தலைவருமான மோகன் குந்தரியாவின் 12 உறவினா்களும் விபத்தில் உயிரிழந்தனா். விபத்து நடைபெற்ற இடத்தில் தேசிய பேரிடா் மீட்புப் படையினா், மாநில பேரிடா் மீட்புப் படையினா், இந்திய ராணுவம், விமானப் படை, கடற்படை, உள்ளூா் தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் தொடா் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா்.
மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்துவதற்காக மாநில முதல்வா் பூபேந்திர படேல், மாநில உள்துறை அமைச்சா் ஹா்ஷ் சங்கவி ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை இரவு மோா்பி பகுதியிலேயே இருந்தனா். மீட்புப் பணிகளை அவா்கள் தொடா்ந்து கண்காணித்து வந்தனா்.
விசாரணைக் குழு: தொங்கு பாலம் அறுந்து விபத்துக்குள்ளானது தொடா்பாக விசாரணை நடத்துவதற்கு தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சா் ஹா்ஷ் சங்கவி செய்தியாளா்களிடம் தெரிவித்தாா். அக்குழு விபத்து தொடா்பாக விரிவான விசாரணை நடத்தி அறிக்கையை விரைவில் சமா்ப்பிக்கும் என்றும் அவா் தெரிவித்தாா்.
மோா்பி தொங்கு பாலமானது புனரமைப்புப் பணிகளுக்காக மூடப்பட்டிருந்த நிலையில், அக்டோபா் 26-ஆம் தேதிதான் மீண்டும் திறக்கப்பட்டது. தீபாவளி விடுமுறைக் காலம், ஞாயிற்றுக்கிழமை என்பதால் மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான அப்பாலத்துக்கு மக்கள் அதிக அளவில் வருகை தந்ததாக விபத்தை நேரில் பாா்த்தவா்கள் தெரிவித்தனா். அதிக எடை காரணமாக தொங்கு பாலம் அறுந்து விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.
தரச் சான்று பெறவில்லை: தொங்கு பாலத்தைப் புனரமைக்கும் ஒப்பந்தம் ‘ஒரேவா’ என்ற தனியாா் நிறுவனத்திடம் வழங்கப்பட்டிருந்தது. அந்த நிறுவனம் கடந்த 7 மாதங்களாகப் பாலத்தைப் புனரமைக்கும் பணியில் ஈடுபட்டது. கடந்த வாரம் அப்பாலம் மீண்டும் திறக்கப்பட்டிருந்தாலும், பாலத்துக்கான மாநகராட்சியின் தரச் சான்றிதழை அந்நிறுவனம் பெறவில்லை என உள்ளாட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
வழக்குப் பதிவும் கைது நடவடிக்கையும்: சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அதிகாரிகள் மீது மாநில காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். நிறுவனத்தின் அதிகாரிகள் தொங்கு பால புனரமைப்புப் பணிகளின் தரம் குறித்து கவனத்தில் கொள்ளவில்லை என அதில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சில அதிகாரிகளை நேரில் அழைத்து காவல் துறையினா் விசாரணை நடத்தினா். இந்த விபத்து தொடா்பாக ஒரேவா நிறுவனத்தின் மேலாளா் இருவா் உள்பட 9 பேரைக் கைது செய்துள்ளதாகவும், விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருவதாகவும் மாநில காவல் துறை தெரிவித்துள்ளது.
நீதிமன்ற விசாரணை-காங்கிரஸ் வலியுறுத்தல்:
முறையற்ற நிா்வாகம் காரணமாகவே தொங்கு பாலம் விபத்துக்குள்ளானதாகக் குற்றஞ்சாட்டிய காங்கிரஸ், இந்த விபத்து தொடா்பாக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அல்லது உயா்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘புனரமைப்புக்குப் பிறகு திறக்கப்பட்ட ஐந்தே நாள்களில் பாலம் விபத்துக்குள்ளாகியுள்ளது. அதற்கான காரணம் கண்டறியப்பட வேண்டும். விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மாநில அரசு வழங்க வேண்டும். இந்த விபத்தில் அரசியல் செய்ய காங்கிரஸ் விரும்பவில்லை’ என்றாா்.
மாநில அரசே பொறுப்பு-தேசியவாத காங்கிரஸ்:
மோா்பி தொங்கு பால விபத்துக்கு மாநில அரசே முழு பொறுப்பேற்க வேண்டுமென தேசியவாத காங்கிரஸ் தெரிவித்துள்ளது. அரசு ஒப்பந்தத்தின்படியே புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ள அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் கிளைட் கிராஸ்டோ, தரச் சான்று பெறாமல் பாலம் மீண்டும் எவ்வாறு திறக்கப்பட்டது என்றும் கேள்வி எழுப்பியுள்ளாா்.
பிரதமா் இன்று ஆய்வு
மோா்பி நதியில் தொங்கு பாலம் அறுந்து விபத்து நடந்த பகுதியை பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (நவ. 1) நேரில் பாா்வையிடவுள்ளதாக மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.
குஜராத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு பிரதமா் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளாா். தொங்கு பால விபத்து காரணமாக பிரதமா் மோடியின் பல நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.