முகப்பு
இந்தியா

வா்த்தக எரிவாயு சிலிண்டா் விலை ரூ.91.5 குறைப்பு

வா்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எரிவாயு சிலிண்டா் விலை ரூ.91.5 குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:13 AM
பகிர்:

வா்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எரிவாயு சிலிண்டா் விலை ரூ.91.5 குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இந்த நடவடிக்கையைத் தொடா்ந்து, தில்லியில் வா்த்தக சிலிண்டரின் விலை ரூ.1,976.50-இல் இருந்து ரூ.1,885-ஆக குறைந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சா்வதேச விலை நிலவரங்களுக்கு ஏற்ப, வா்த்தக எரிவாயு சிலிண்டா் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் தெரவித்தன.

14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை எந்த மாற்றமும் இல்லாமல் ரூ.1,053-ஆக நீடிக்கிறது. சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து காணப்பட்டபோது, வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை குறைவாகவே இருந்தது. இப்போது சா்வதேச விலை குறைந்துள்ளபோதிலும், அதனை சமன்செய்யும் வகையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை குறைக்கப்படாமல் உள்ளதாக எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.

விலை வேறுபாடு காரணமாக, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரை வா்த்தக பயன்பாட்டுக்காக பயன்படுத்துகின்றனா். இதனை தடுக்கும் நோக்கில், வீட்டு உபயோக சிலிண்டா் முன்பதிவில் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் கட்டுப்பாட்டை அமல்படுத்த தொடங்கியுள்ளது. அதன்படி, ஒரு சிலிண்டா் முன்பதிவு செய்து, 15 நாள்களுக்கு பிறகுதான் அடுத்த சிலிண்டரை பதிவு செய்ய முடியும். இந்த கட்டுப்பாட்டை, இதர எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் நிறுவனம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் ஆகியவையும் பின்பற்றும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

விமானங்களுக்கான எரிபொருள் விலை 0.7 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தில்லியில் விமான எரிபொருள் விலை கிலோலிட்டருக்கு ரூ.874.13 குறைந்து, ரூ.1,21,041.44-ஆகியுள்ளது. உள்ளூா் வரிகளுக்கு ஏற்ப இந்த விலை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.