அரசுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டு அதிக அளவில் கைதானவர்களில் அசாம் மாநிலம் முதலிடத்தில் உள்ளதாக என்சிஆர்பி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை வெளியான பிறகு எதிர்க்கட்சிகள் அசாமில் ஆளும் பாஜக அரசை கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளனர். அசாமில் ஆளும் பாஜக அரசு கடுமையான சட்டங்களைப் பயன்படுத்தி அரசுக்கு எதிராக பேசுபவர்களை காவல் துறை உதவியுடன் கைது செய்து வருகிறது.
என்சிஆர்பி அறிக்கையின்படி, அசாமில் இந்த ஆண்டு அரசுக்கு எதிராக பேசியவர்கள் என 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 36 ஆக இருந்தது. ஐந்து தண்டனைச் சட்டங்களின் கீழ் அரசுக்கு எதிரான கருத்தை தெரிவிப்பவர்கள் கைது செய்யப்படுகிறார்கள் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 124A, 121, 121A,122 மற்றும் 123 ஆகிய பிரிவுகளின் கீழ் அரசுக்கு எதிராக பேசிய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களை கைது செய்வதில் அசாமைத் தொடர்ந்து ஆந்திரம் ( 30 பேர்), ஜம்மு-காஷ்மீர் (13 பேர்) மற்றும் மணிப்பூர் (10 பேர்) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்த மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தியே உள்ளது.
இது குறித்து அசாமின் எதிர்க்கட்சித் தலைவர் தேபபிரதா சாய்கியா கூறியதாவது: “ மாநிலத்தில் பல உதாரணங்களைக் கூறலாம். சிறிய குற்றங்களுக்காக பாஜக அரசு கடுமையான சட்டங்களைப் பயன்படுத்தி பலரைக் கைது செய்துள்ளது. அசாம் அரசு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலைப் பின்பற்றவில்லை. காவல் துறையைப் பயன்படுத்தி பாஜக அரசு மக்களை தேவையில்லாமல் அச்சுறுத்தி வருகிறது. சில நேரங்களில் காவல் துறை டிஜிபியின் சில தேவையற்ற கருத்துகளையும் மாநிலத்தில் பார்க்க முடிகிறது.” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.