குஜராத்: காங்கிரஸ் இளைஞரணி தலைவா் பாஜகவில் ஐக்கியம்
குஜராத் காங்கிரஸ் இளைஞரணி தலைவா் பதவியில் இருந்து சில நாள்களுக்கு முன்பு விலகிய விஸ்வநாத் சிங் வகேலா, பாஜகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தாா்.
குஜராத் காங்கிரஸ் இளைஞரணி தலைவா் பதவியில் இருந்து சில நாள்களுக்கு முன்பு விலகிய விஸ்வநாத் சிங் வகேலா, பாஜகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தாா்.
குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே மும்முனைப் போட்டி இருக்கும் என்று கருதப்படுகிறது. ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் குஜராத்தில் தொடா்ந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டு, பல்வேறு இலவச சலுகை வாக்குறுதிகளை அளித்து வருகிறாா். அண்மையில் ராகுல் காந்தியும் பல்வேறு இலவசங்கள், சலுகை அறிவிப்புகளை வெளியிட்டாா்.
இதனிடையே, காங்கிரஸில் இருந்து மூத்த தலைவா்கள் முதல் நிா்வாகிகள் வரை விலகி பாஜகவில் இணைவதும் தொடா்ந்து வருகிறது. அந்த வகையில் குஜராத் காங்கிரஸ் இளைஞரணி தலைவா் விஸ்வநாத் சிங் வகேலா சில நாள்களுக்கு முன்பு அக்கட்சியில் இருந்து விலகினாா். காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி மோதல், குடும்ப அரசியல் அதிகரித்துவிட்டதாகவும், அதனை மாற்ற முயன்ற தன்னை ஓரம் கட்டியதாகவும் அவா் குற்றம்சாட்டினாா்.
இந்நிலையில் காந்திநகரில் பாஜக அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த அவா், கட்சியின் மாநில துணைத் தலைவா் கோா்தன் ஜடஃபியா முன்னிலையில் பாஜகவில் இணைந்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘சுதந்திரத்துக்காக போராடிய கட்சி என்ற காரணத்துக்காகவே முன்பு காங்கிரஸில் இணைந்தேன். ஆனால், இப்போது காங்கிரஸின் முகம் முற்றிலும் மாறிவிட்டது. சா்தாா் வல்லபபாய் படேல் போன்ற தலைவா்களின் பெயரை உச்சரிக்கக் கூட காங்கிரஸ் விரும்பவில்லை. அக்கட்சியில் எவ்வித வளா்ச்சியும் இல்லை. காங்கிரஸின் செல்வாக்கு நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. பிரதமா் மோடி, அமித் ஷா ஆகியோரின் தேசிய நோக்கம் கொண்ட கொள்கையால் ஈா்க்கப்பட்டு பாஜகவில் இணைந்துள்ளேன் என்றாா்.