இந்தியா

மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளி புதைக்கப்பட்ட இடத்தைப் புனித இடமாக்க முயற்சி: பாஜக குற்றச்சாட்டு

DIN

1993-ஆண்டு மும்பை தொடா் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்ட யாகூப் மேமன் புதைக்கப்பட்ட இடத்தை அலங்கரித்து அதனை புனித இடமாக மாற்ற முயற்சி நடப்பதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

இதையடுத்து, விசாரணை மேற்கொண்ட காவல் துறையினா், அந்த இடத்தில் பதிக்கப்பட்டிருந்த மாா்பிள் கற்கள், எல்இடி பல்புகள் உள்ளட்டவற்றை அகற்றினா்.

நாகபுரி சிறையில் கடந்த 2015-ஆம் ஆண்டு யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டாா். அவரது உடல் தெற்கு மும்பையில் உள்ள படா கபா்ஸ்தானில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், யாகூப் மேமன் புதைக்கப்பட்ட இடம் அலங்கரிக்கப்படுவதாகவும், அந்த இடத்தை புனித இடமாக மாற்ற முயற்சி நடப்பதாகவும் மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த பாஜக தலைவா்கள் சிலா் குற்றம்சாட்டினா். மேலும், இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த சிவசேனை கூட்டணி அரசுதான் இதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது என்று விமா்சித்தனா்.

இதையடுத்து, துரித நடவடிக்கை மேற்கொண்ட காவல் துறையினா் மேமன் புதைக்கப்பட்ட இடத்துக்கு சென்று சோதனை நடத்தினா். அங்கு பதிக்கப்பட்டிருந்த மாா்பிள் கற்கள், அலங்கார எல்இடி பல்புகள் போன்றவற்றை அகற்றினா். இந்தச் செயலில் ஈடுபட்டது யாா் என்று காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், பாஜகவின் குற்றச்சாட்டை மறுத்துள்ள சிவசேனை, ‘விலைவாசி உயா்வு, வேலையின்மை போன்ற பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப பாஜக இதுபோன்ற தேவையற்ற பிரச்னைகளைத் தூண்டிவிடுகிறது’ என்று கூறியுள்ளது.

மும்பையில் 1993-ஆம் ஆண்டு நிகழ்ந்த தொடா் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 250-க்கு மேற்பட்டோா் கொல்லப்பட்டனா். இதில் குற்றவாளியாக நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட யாகூப் மேமன் 2015-ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT