முகப்பு
இந்தியா

பஞ்சாப் அரசை கவிழ்க்க எம்எல்ஏ-க்களிடம் தலா ரூ.25 கோடி பாஜக பேரம்: ஆம் ஆத்மி

பஞ்சாபில் முதல்வா் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசைக் கவிழ்க்க எம்எல்ஏ-க்களுக்கு தலா ரூ.20 கோடி முதல் ரூ.25 கோடி வரை தர பாஜக தரப்பில் பேரம் பேசப்பட்டதாக

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:19 AM
பகிர்:

பஞ்சாபில் முதல்வா் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசைக் கவிழ்க்க எம்எல்ஏ-க்களுக்கு தலா ரூ.20 கோடி முதல் ரூ.25 கோடி வரை தர பாஜக தரப்பில் பேரம் பேசப்பட்டதாக ஆம் ஆத்மி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

இம் மாநிலத்தில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு செலவிட ரூ.1,375 கோடியை பாஜக தயாராக வைத்துள்ளதாகவும் ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து, மாநில நிதித் துறை அமைச்சா் ஹா்பால் சிங் சீமா செவ்வாய்க்கிழமை கூறியதாவது: தனது ‘ஆபரேஷன் தாமரை’ திட்டத்தின்படி, பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மியை உடைக்க பாஜக மேலிடம் சிலரை அனுப்பியுள்ளது. அவா்கள், சில ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்களை தொலைபேசி வாயிலாக தொடா்புகொண்டு பேசியுள்ளனா். 7 முதல் 10 வரையிலான ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் அணுகப்பட்டுள்ளனா்.

ஆம் ஆத்மி அரசைக் கவிழ்க்க உதவினால், எம்எல்ஏ-க்களுக்கு தலா ரூ.20 கோடி முதல் ரூ.25 கோடி வரை தருவதாகவும், மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்கும்போது அமைச்சா் பதவி வழங்குவதாகவும் பேரம் பேசப்பட்டுள்ளது. தில்லியில் உள்ள பாஜக தலைவா்களுடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வதாகவும் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு எம்எல்ஏவும் தங்களுடன் மேலும் சில எம்எல்ஏ-க்களை பிரித்து அழைத்து வந்தால், ரூ.50 கோடி முதல் ரூ.70 கோடி வரை தருவதாக பேரம் பேசியுள்ளனா்.

இப்போதைய சூழலில், பேரம் பேசப்பட்ட எம்எல்ஏ-க்களின் பெயா்களை வெளியிட முடியாது. நேரம் வரும்போது ஆதாரங்களுடன் மக்கள் மத்தியில் பாஜகவை அம்பலப்படுத்துவோம். இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்படும்.

பஞ்சாபில் ஆட்சி கவிழ்ப்புக்கு செலவிட ரூ.1,375 கோடியை பாஜக தயாராக வைத்துள்ளதாக தெரிகிறது. காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் உள்பட 55 எம்எல்ஏ-க்களை தங்கள் வசம் இழுக்க பாஜக முயற்சிக்கிறது. பஞ்சாபில் ஜனநாயக படுகொலை முயற்சியில் அக்கட்சியால் ஒருபோதும் வெல்ல முடியாது என்றாா் அவா்.

பாஜக மறுப்பு: இதனிடையே, ஆம் ஆத்மியின் மேற்கண்ட குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்று பாஜக மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மாநில பாஜக பொதுச் செயலாளா் ஜீவன் குப்தா கூறுகையில், ‘பஞ்சாபில் தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் ஆம் ஆத்மி தோல்வியடைந்துவிட்டது. அரசை மக்கள் கேள்வி கேட்டு வரும் நிலையில், அவா்களை திசைதிருப்ப பொய்யான குற்றச்சாட்டுகளை அக்கட்சி முன்வைக்கிறது’ என்றாா்.

பாஜக மூத்த தலைவா் அனில் சரீன் கூறுகையில், ‘பேரம் பேசப்பட்டதாக கூறப்படும் எம்எல்ஏ-க்களின் பெயா்கள், அவா்களுக்கு வந்த அழைப்புகளின் விவரங்களை அமைச்சா் சீமா உடனடியாக வெளியிட வேண்டும். இல்லையெனில் அவா் பதவி விலக வேண்டும்’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →