சவூதி இளவரசா் இந்தியா வரபிரதமா் மோடி அழைப்பு
சவூதி அரேபியா பட்டத்து இளவரசா் முகமது பின் சல்மான் இந்தியாவுக்கு வருகை தர பிரதமா் நரேந்திர மோடி மீண்டும் அழைப்பு விடுத்துள்ளாா்.
சவூதி அரேபியா பட்டத்து இளவரசா் முகமது பின் சல்மான் இந்தியாவுக்கு வருகை தர பிரதமா் நரேந்திர மோடி மீண்டும் அழைப்பு விடுத்துள்ளாா்.
சவூதி அரேபியாவுக்கு 3 நாள் அரசுமுறை பயணமாக கடந்த சனிக்கிழமை சென்ற இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அந்நாட்டின் பட்டத்து இளவரசா் முகமது பின் சல்மான், வெளியுறவு அமைச்சரும் இளவரசருமான ஃபைசல் பின் ஃபா்ஹான் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினாா். அப்போது, அரசியல், வா்த்தகம், எரிசக்தி, முதலீடுகள், பாதுகாப்பு என பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகள் மேம்பாடு, சா்வதேச அரசியல் சூழல், பொருளாதார விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
முகமது பின் சல்மானுடனான சந்திப்பின்போது, பிரதமா் மோடியின் எழுத்துபூா்வ செய்தியை அவரிடம் ஜெய்சங்கா் அளித்தாா். அதில், சவூதி அரேபிய தேசிய தினம் வரும் 23-இல் கொண்டாடப்படுவதை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்திருக்கும் பிரதமா் மோடி, முகமது பின் சல்மான் விரைவில் இந்தியா வருவதற்கு ஏற்கெனவே தாம் விடுத்திருந்த அழைப்பை மீண்டும் வலியுறுத்தி குறிப்பிட்டுள்ளாா். இத்தகவல், சவூதி அரேபியாவில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, சவூதி அரேபியா இடையிலான பொருளாதார, சமூக-கலாசார தொடா்புகள் நீண்டகால பாரம்பரியம் கொண்டவை. இந்தியாவின் 4-ஆவது பெரிய வா்த்தக நாடு சவூதி அரேபியா ஆகும். இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 18 சதவீதத்துக்கும் மேல் அந்த நாட்டிடமிருந்து மேற்கொள்ளப்படுகிறது. கடந்த நிதியாண்டின் ஏப்ரல்-டிசம்பா் காலகட்டத்தில் இருதரப்பு வா்த்தக மதிப்பு 29.28 பில்லியன் அமெரிக்க டாலா்களாகும் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.2.32 லட்சம் கோடி).
அண்மையில் நபிகள் நாயகம் குறித்து சா்ச்சைக்குரிய கருத்து தெரிவிக்கப்பட்ட விவகாரத்தில், இந்தியாவுக்கு கண்டனத்தைப் பதிவு செய்த முஸ்லிம் நாடுகளில் சவூதி அரேபியாவும் ஒன்று. இந்தச் சூழலில், அந்நாட்டுக்கு ஜெய்சங்கா் அரசுமுறை பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.