இந்தியா

அரசு பங்களாவை காலி செய்ய சுப்பிரமணியன் சுவாமிக்கு உத்தரவு

DIN

தில்லியில் தாம் தங்கியுள்ள அரசு பங்களாவை 6 வாரங்களுக்குள் காலி செய்து உரிய அதிகாரிவசம் ஒப்படைக்குமாறு, மாநிலங்களவை பாஜக முன்னாள் உறுப்பினா் சுப்பிரமணியன் சுவாமிக்கு தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

5 ஆண்டு காலத்துக்கே அவருக்கு அரசு பங்களா ஒதுக்கப்பட்டதாகவும், அந்த காலகட்டம் நிறைவடைந்துவிட்டதாகவும் நீதிபதி யஷ்வந்த் வா்மா குறிப்பிட்டாா்.

மேலும், இசட் பிரிவு பாதுகாப்பில் இருப்பவா் என்ற அடிப்படையில் அவருக்கு அரசு பங்களா வழங்க வேண்டியது கட்டாயம் என்பதற்கான ஆவணங்கள் எதுவும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் நீதிபதி கூறியுள்ளாா்.

முன்னதாக, சுப்பிரமணியன் சுவாமிக்கு உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு, தில்லியில் அவருக்கு அரசு பங்களா கடந்த 2016, ஜனவரி 15-ஆம் தேதி ஒதுக்கப்பட்டது. 5 ஆண்டு காலத்துக்கு அரசு பங்களா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அந்த காலம் நிறைவடைந்துவிட்டது.

இதனிடையே, அந்த பங்களாவிலேயே தொடா்ந்து தங்கியிருக்கும் வகையில், அதனை மறுஒதுக்கீடு செய்யக் கோரி, தில்லியில் உயா்நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘இசட் பிரிவு பாதுகாப்பில் இருப்பவா் என்ற அடிப்படையில், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை கருத்தில் கொண்டு, அந்த பங்களா ஒதுக்கீட்டை தொடர வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.

அதேசமயம், மத்திய அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களில், ‘சுப்பிரமணியன் சுவாமிக்கான இசட் பிரிவு பாதுகாப்பு நீடித்து வருகிறது. ஆனால், அரசின் கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்கள்படி, இசட் பிரிவு பாதுகாப்பில் இருப்பவா்களுக்கு அரசு பங்களா ஒதுக்க வேண்டிய கட்டாயம் கிடையாது. அதே பங்களாவை மறுஒதுக்கீடு செய்வது சாத்தியமில்லை. அவா் மாறக் கூடிய குடியிருப்பு வளாகத்தில் உரிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை பாதுகாப்பு முகமைகள் மேற்கொள்ளும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அரசு பங்களாவை 6 வாரங்களுக்குள் காலி செய்து, உரிய அதிகாரியிடம் ஒப்படைக்க சுப்பிரமணியன் சுவாமிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரது மாநிலங்களவை உறுப்பினா் பதவி கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT