முன்னாள் அமைச்சர் வேலுமணி வழக்கு விவகாரம்: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு முடித்துவைப்பு
தன் மீதான டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்குகளை ரத்து செய்யக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனு மீதான உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து
தன் மீதான டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்குகளை ரத்து செய்யக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனு மீதான உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை முடித்து வைத்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
சம்பந்தப்பட்ட வழக்கை தகுதியின் அடிப்படையில் விசாரித்து முடிக்குமாறு உயர்நீதிமன்றத்தை உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
முந்தைய அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை உள்ளிட்ட மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக ஊழல் தடுப்புப் பிரிவினர் வழக்குகள் பதிவு செய்தனர். இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி எஸ்.பி.வேலுமணி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, எஸ்.பி.வேலுமணி தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு ஆஜரானார். மத்திய அரசின் வருமான வரித் துறை வழக்குகளில் ஆஜரான அவர், இந்த வழக்கில் ஆஜராவதாகக் கூறி தமிழக அரசுத் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த மனுவை தனி நீதிபதிதான் விசாரிக்க முடியும் என்றும் வாதிடப்பட்டது.
இந்த நிலையில், செப்டம்பர் 7-ஆம் தேதி இந்த விவகாரத்தை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த இடைக்கால உத்தரவில், தமிழக அரசின் ஆட்சேபத்தை நிராகரித்து, டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்குகளை ரத்து செய்யக் கோரி எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்குகளை முதல் அமர்வு விசாரிக்கும் என்றும், இந்த வழக்கில் மத்திய அரசுத் தரப்பு வழக்குரைஞர் ஆஜராகலாம் என்றும் கூறி வேலுமணி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை செப்டம்பர் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தது.
இந்த உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் ஊழல் தடுப்புப் பிரிவு தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த வெள்ளிக்கிழமை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது, மனுதாரர் தரப்பில் சம்பந்தப்பட்ட வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் செப்டம்பர் 14-ஆம் தேதிக்கு பட்டியலிட்டது.
அதன்படி, உச்சநீதிமன்றத்தில் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான அமர்வு முன் புதன்கிழமை மேல்முறையீட்டு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், கூடுதல் தலைமை வழக்குரைஞர் அமித் ஆனந்த் திவாரி ஆகியோர் ஆஜராகினர். கபில் சிபலிடம் நீதிபதிகள் அமர்வு, உயர்நீதிமன்றத்தில் எஸ்.பி. வேலுமணியின் வழக்குகள் குறித்து கேள்வி எழுப்பியது.
அதற்கு "வேலுமணிக்கு எதிராக டெண்டர் முறைகேடு புகார் விவகாரத்தில் ஊழல் தடுப்புப் பிரிவின் மூலம் பதிவு செய்யப்பட்ட இரு வழக்குகளும், வருமானத்துக்குப் பொருந்தாத சொத்துக் குவிப்பு வழக்கும் உள்ளது. இவை வெவ்வேறானவை. இந்த வழக்குகளை ஒன்றாக சேர்த்து விசாரிக்க முடியாது. இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் மிகவும் விசித்திரமான முறையில் விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுபோன்று செய்திருக்கக் கூடாது. மேலும், உரிய வகையில் ஆராய்ந்து பார்க்காமல் அவசர கோலத்தில் உயர்நீதிமன்ற அமர்வு இடைக்கால உத்தரவு பிறப்பித்திருக்கிறது' என்றார்.
எதிர்மனுதாரர் எஸ்.பி.வேலுமணி தரப்பில் மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி, "இந்த விவகாரத்தில் மத்திய அரசின் வழக்குரைஞர் வாதிடுவதற்கு ஆட்சேபம் தெரிவித்தது சரியல்ல. மேலும், வழக்குகளை யார் விசாரிக்க வேண்டும் என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் மனுதாரர் தரப்பில் நடந்துகொண்ட விதம் சரியல்ல. இதனால், இந்த மேல்முறையீட்டு மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்' என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு நீதிபதி அமர்வு, "இந்த விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் தகுதியின் அடிப்படையில் விசாரித்து முடிவு காண வேண்டும்' என்று கூறி மேல்முறையீட்டு மனுவை முடித்துவைத்தது.