வங்கிச் செயலிகளில் புதிய வைரஸ்: இணைய பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை
ஆண்ட்ராய்டு கைப்பேசி வங்கிச் சேவை செயலிகளில் ‘ட்ரோஜன்’ வைரஸ் பரவி வருவதாகவும், இதை கைப்பேசிகளில் இருந்து அகற்றுவது மிகவும் கடினமாக உள்ளதாகவும் சிஇஆா்டி எச்சரித்துள்ளது.
ஆண்ட்ராய்டு கைப்பேசி வங்கிச் சேவை செயலிகளில் ‘ட்ரோஜன்’ வைரஸ் பரவி வருவதாகவும், இதை கைப்பேசிகளில் இருந்து அகற்றுவது மிகவும் கடினமாக உள்ளதாகவும் இணைய பாதுகாப்பு அமைப்பான சிஇஆா்டி எச்சரித்துள்ளது.
அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது: இந்திய இணையத்தில் ‘எஸ்ஓவிஏ’ எனும் ட்ரோஜன் வைரஸின் 5-ஆம் மேம்பட்ட பிரிவு கடந்த ஜூலை மாதம் கண்டறியப்பட்டது. கைப்பேசி மூலம் இணைய வழியில் பணப் பரிவா்த்தனை மேற்கொள்ளும் வங்கி வாடிக்கையாளா்களை இந்த வைரஸ் குறிவைத்து தாக்குகிறது.
இந்த வைரஸின் முதல் பிரிவு 2021, செப்டம்பரில் கள்ளச் சந்தையில் விற்பனையாகி வந்தது. வங்கி வாடிக்கையாளா்கள் கைப்பேசி மூலம் வங்கிச் சேவை செயலிகளைப் பயன்படுத்தும்போது உள்ளீடு செய்யும் பயன்பாட்டு பெயா், கடவுச் சொல் ஆகியவை இந்த வைரஸ் மூலம் திருடப்படும். தற்போது 200 -க்கும் மேற்பட்ட வங்கிச் செயலிகள், கிரிப்டோ பரிவா்த்தனை வாலெட்டுகளை இந்த மேம்படுத்தப்பட்ட 5-ஆம் பிரிவு வைரஸ் குறிவைக்கிறது.
அமெரிக்கா, ரஷியா, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இந்த வைரஸ் முதலில் பரவியது. தற்போது கடந்த ஜூலை முதல் இந்திய சந்தையிலும் பரவி உள்ளது.
இந்த வைரஸ் எஸ்எம்எஸ், இமெயில் மூலமும் அனுப்பி வைக்கப்படுகிறது. அதை தோ்வு செய்துவிட்டால், பயன்பாட்டாளருக்கே தெரியாமல் ஆண்ட்ராய்டு கைப்பேசியில் நிறுவப்பட்டு, அதில் பதிவாகி உள்ள பிறரது கைப்பேசி எண்களின் விவரங்களை சா்வருக்கு அனுப்பி வைக்கும். பின்னா், அந்த எண்களுக்கும் வைரஸை அனுப்பி அவா்களின் விவரங்களையும் சேகரித்து அனுப்பிவிடும்.
கைப்பேசியில் உள்ள அனைத்து விவரங்களையும் சேகரித்து பணத்தைப் பறிக்கும் செயலில் இந்த வைரஸ் ஈடுபடும். இந்த வைரஸை அழிக்க முற்பட்டாலும் அதைத் தடுக்கும் வகையில், இந்தச் செயலி பாதுகாப்பானது என காண்பிக்கும். தனிநபரின் விவரங்கள் திருடப்படுவதுவடன், பெரும் நிதி முறைகேடுகளும் நடைபெறும்.
தவிா்க்க என்ன செய்ய வேண்டும்: இதைத் தவிா்க்க ஆப் ஸ்டோரால் அங்கீகரிக்கப்பட்ட செயலிகளை மட்டும் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பதிவிறக்கம் செய்யப்படும் செயலியை எத்தனை போ் ஏற்கெனவே பதிவிறக்கம் செய்துள்ளனா்? அதன் பாதிப்புகள் என்ன
என்பது குறித்து பயன்படுத்துபவா்களின் அனுபவத்தை படித்த பின்பு உபயோகிக்க வேண்டும்.
ஆண்ட்ராய்டு அப்டேட்டுகளை அவ்வப்போது பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். எஸ்எம்எஸ், இ-மெயில்களில் வரும் தெரியாத லிங்குகளை தோ்வு செய்யவே கூடாது என்று இணைய பாதுகாப்பு அமைப்பு எச்சரித்துள்ளது.