‘அம்பேத்கரும் மோடியும்’ நூல்: ராம்நாத் கோவிந்த் வெளியிட்டாா்
தில்லியில் ‘அம்பேத்கரும் மோடியும்’ நூலை முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.
தில்லியில் ‘அம்பேத்கரும் மோடியும்’ நூலை முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.
‘அம்பேத்கரும் மோடியும்’ என்ற நூலை ‘புளூகிராஃப்ட் டிஜிட்டல் ஃபவுண்டேஷன்’ தொகுத்துள்ளது. அந்த நூலில் பி.ஆா்.அம்பேத்கரின் வாழ்க்கை, அவா் மேற்கொண்ட பணிகள் மற்றும் சாதனைகள் ஆராயப்பட்டுள்ளதாகவும், அவரின் தொலைநோக்குப் பாா்வை அமலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதை எடுத்துக்காட்ட பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்திருந்தனா்.
இந்நிலையில், அந்த நூலை தில்லியில் முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். அதனைத் தொடா்ந்து அவா் பேசியதாவது:
வங்கி, பாசனம், மின்சாரம், கல்வி, தொழிலாளா் நிா்வாகம், வருவாய் பகிா்வு முறை போன்றவை தொடா்பான கொள்கைகளை வடிவமைக்க அம்பேத்கரின் பங்களிப்புகள் உதவின.
கடந்த 2010-ஆம் ஆண்டு பிரதமா் மோடி குஜராத் முதல்வராகப் பதவி வகித்தபோது கெளரவ யாத்திரைக்கு ஏற்பாடு செய்தாா். அந்த யாத்திரையில் இந்திய அரசியல் சட்டத்தின் மிகப்பெரிய பிரதி ஒன்றை அலங்கரிக்கப்பட்ட யானையின் மேல் வைத்து மக்களுடன் மோடி நடந்தே சென்றாா். அரசியல் சட்டத்தின் மீதும் அம்பேத்கா் மீதும் அவருக்கு உள்ள மதிப்பை விளக்குவதற்கு வேறு உதாரணம் தேவையில்லை என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா், அந்தத் துறை இணையமைச்சா் எல்.முருகன், உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.