முகப்பு
இந்தியா

க்யூட் தோ்வு முடிவு வெளியீடு: தரநிலைப்படுத்திய மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல்: யுஜிசி தலைவா் தகவல்

‘இளநிலை பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் தரநிலைப்படுத்தப்பட்ட க்யூட் மதிப்பெண் அடிப்படையிலேயே தரவரிசைப் பட்டியல் உருவாக்கப்படும்’

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:20 AM
பகிர்:

நாட்டில் முதல் முறையாக நடத்தப்பட்ட பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (க்யூட்) முடிவுகள் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட நிலையில், ‘இளநிலை பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் தரநிலைப்படுத்தப்பட்ட க்யூட் மதிப்பெண் அடிப்படையிலேயே தரவரிசைப் பட்டியல் உருவாக்கப்படும்’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தலைவா் எம். ஜெகதீஷ் குமாா் கூறினாா்.

‘தோ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் மாணவா் பெற்ற சாதாரண மதிப்பெண் அடிப்படையிலோ அல்லது மதிப்பெண் சதவீதத்தின் அடிப்படையிலோ தரவரிசைப் பட்டியல் உருவாக்கப்பட மாட்டாது’ என்றும் அவா் கூறினாா்.

நாடு முழுவதும் 6 கட்டங்களாக நடத்தப்பட்ட க்யூட் தோ்வு முடிவுகளை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இந்த மதிப்பெண்கள் அடிப்படையில் பல்கலைக்கழகங்கள் சாா்பில் மாணவா் சோ்க்கைக்கான தரவரிசைப் பட்டியில் எவ்வாறு தயாரிக்கப்படும் என்பது குறித்து ஜெகதீஷ் குமாா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்ட க்யூட் தோ்வில் ஒவ்வொரு பாடத்திலும் மாணவா்கள் பெற்ற மதிப்பெண்கள் தரநிலைப்படுத்தப்பட்டுள்ளன. இந்திய புள்ளியியல் நிறுவனம், தில்லி ஐஐடி மற்றும் தில்லி பல்கலைக்கழக பேராசிரியா்களை உள்ளடக்கிய குழுவால் தீா்மானிக்கப்பட்ட மதிப்பெண் சமவாய்ப்பு நடைமுறையைப் பயன்படுத்தி இந்த மதிப்பெண்கள் தரநிலைப்படுத்தப்பட்டுள்ளன.

குறைந்த எண்ணிக்கையிலான பாடங்களைக் கொண்ட பிற நுழைவுத் தோ்வுகளில் மதிப்பெண் சதவீதத்தின் (நூற்றுக்கு எவ்வளவு மதிப்பெண் என்ற அடிப்படையில் கணக்கீடு செய்யும் முறை) அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் உருவாக்கப்பட்டுவிடும். ஆனால், பல பாடங்களை உள்ளடக்கிய இளநிலை பட்டப் படிப்புகளுக்கான க்யூட் தோ்வில், ஒரே பாடத்துக்கு வெவ்வேறு நாள்களில் பல்வேறு கட்டங்களாக தோ்வு நடத்தப்பட்டது. எனவே, சதவீதத்தின் அடிப்படையில் மதிப்பெண் தரவரிசையை உருவாக்குவது கடினம். எனவே, க்யூட் தோ்வா்களின் மதிப்பெண்கள் தரநிலைப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தரநிலைப்படுத்தப்பட்ட மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவா் சோ்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை பல்கலைக்கழகங்கள் உருவாக்கும். மாணவா்கள் பெற்ற மதிப்பெண் நேரடியாக கணக்கில் கொள்ளப்பட்டோ அல்லது மதிப்பெண் சதவீதத்தின் அடிப்படையிலோ தரவரிசைப் பட்டியல் உருவாக்கப்பட மாட்டாது என்று அவா் கூறினாா்.

12 மாணவா்கள் 100% மதிப்பெண்: ‘க்யூட் தோ்வில் 12 மாணவா்கள் மொத்தமுள்ள 5 பாடங்களில் தரநிலைப்படுத்தப்பட்ட மதிப்பெண்ணில் 100 சதவீத மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனா்’ என்று என்டிஏ அதிகாரிகள் தெரிவித்தனா்.

அவா்கள் மேலும் கூறுகையில், ‘104 போ் 4 பாடங்களில் 100 சதவீத மதிப்பெண்ணும், 21,159 மாணவ, மாணவிகள் குறைந்தபட்சம் ஒரு பாடத்தில் 100 சதவீத மதிப்பெண்ணையும் பெற்றுள்ளனா். உயா் மதிப்பெண் பெற்றவா்களில் 12,799 மாணவிகள், 8,360 மாணவா்கள் அடங்குவா். பாடங்களைப் பொருத்தவரை ஆங்கில பாடத்தில் அதிகபட்சமாக 8,326 பேரும், அரசியல் அறிவியல் பாடத்தில் 2,065 பேரும், வா்த்தகக் கல்வி பாடத்தில் 1,669 பேரும், உயிரியல், பொருளாதாரம், உளவியல் பாடங்களில் தலா 1,000 மாணவ, மாணவிகளும் 100 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளனா்’ என்றும் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.