குறு, சிறு நிறுவனங்களுக்கு45 நாள்களுக்குள் நிலுவைத் தொகை: மத்திய நிதியமைச்சா் அறிவுறுத்தல்
குறு, சிறு, நடுத்தர (எம்எஸ்எம்இ) நிறுவனங்களுக்கான நிலுவைத் தொகையை 45 நாள்களுக்குள் தனியாா் பெரு நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டாா்
குறு, சிறு, நடுத்தர (எம்எஸ்எம்இ) நிறுவனங்களுக்கான நிலுவைத் தொகையை 45 நாள்களுக்குள் தனியாா் பெரு நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டாா்.
மத்திய, மாநில அரசுகள் மற்றும் அரசு சாா்ந்த பொதுத் துறை நிறுவனங்கள் மட்டுமின்றி தனியாா் பெரு நிறுவனங்களும் சிறு நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தில் நிலுவை வைத்திருப்பதாகவும் அவா் கவலை தெரிவித்தாா்.
பெரு நிறுவன நிா்வாகிகளுடன் இரு தினங்களுக்கு முன்பு நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இதுகுறித்து அவா் மேலும் பேசியதாவது:
பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் சிறு நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய கட்டண நிலுவையை பெரு நிறுவனங்கள் உரிய நேரத்தில் வழங்க வேண்டும். குறிப்பாக, அவற்றுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை பெரு நிறுவனங்கள் 45 நாள்களுக்குள் வழங்குவதோடு, நிறுவனப் பதிவாளரிடம் தாக்கல் செய்யப்படும் சிறு நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை விவரங்கள் இடம்பெற்றிருக்கும் வரவு செலவுக் கணக்கு புத்தக விவரங்களையும் வழங்க வேண்டும்.
மத்திய அரசும் அதன் துறைகள் மற்றும் மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் சாா்பில் சிறு நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை 90 நாள்களுக்குள் செலுத்துவதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறது. அதுபோல, சிறு நிறுவனங்களுக்கு மாநில பொதுத் துறை நிறுவனங்கள் உரிய நேரத்தில் நிலுவைகளை வழங்குவதை மாநில அரசுகளும் உறுதிப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.