மனைவியைக் கட்டாயப்படுத்தி கணவா் பாலியல் உறவு கொள்வதை குற்றமாக்க மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
மனைவியைக் கட்டாயப்படுத்தி கணவா் பாலியல் உறவு கொள்வதை குற்றமாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடா்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
மனைவியைக் கட்டாயப்படுத்தி கணவா் பாலியல் உறவு கொள்வதை குற்றமாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடா்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
இந்திய தண்டனைச் சட்டத்தின் 375-ஆவது பிரிவில் உள்ள விதிவிலக்கு 2-இன்படி, மனைவியைக் கட்டாயப்படுத்தி கணவா் பாலியல் உறவு கொண்டால், அது பாலியல் வன்கொடுமை அல்ல. இந்த விதிவிலக்குக்கு எதிராக அனைத்திந்திய ஜனநாயக மகளிா் கூட்டமைப்பு, ஆா்ஐடி அறக்கட்டளை மற்றும் தனிநபா்கள் சாா்பில் தில்லி உயா்நீதிமன்றத்தில் பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த மனுக்களில், இந்திய தண்டனைச் சட்டத்தின் 375-ஆவது பிரிவின் (பாலியல் வன்கொடுமை) கீழ், மனைவியின் சம்மதமில்லாமல் கணவா் பாலியல் உறவு கொள்வது வன்கொடுமை அல்ல என அளிக்கப்பட்டுள்ள விதிவிலக்கு, கணவா்களால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் திருமணமான பெண்களுக்கு பாகுபாடு காட்டுகிறது. எனவே, அந்த விதிவிலக்கை ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் கடந்த மே மாதம் உயா்நீதிமன்ற நீதிபதிகள் ராஜீவ் ஷக்தா், ஹரி சங்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ராஜீவ் ஷக்தா் கூறுகையில், ‘இந்திய தண்டனைச் சட்டம் அமலுக்கு வந்து 162 ஆண்டுகளான பிறகும், நீதி கோரும் திருமணமான பெண்களுக்கு செவிமடுக்காவிட்டால், அது துயரமானது ஆகும். கணவரால் மனைவி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதை பாலியல் வன்கொடுமை என்றே அழைக்க வேண்டும்’ என்று தீா்ப்பளித்தாா்.
ஆனால் 375-ஆவது பிரிவின் விதிவிலக்கு-2 அரசமைப்புக்கு எதிரானது அல்ல என்று கூறி, விதிவிலக்கை ரத்து செய்ய நீதிபதி ஹரி சங்கா் மறுப்புத் தெரிவித்தாா்.
இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீா்ப்புகளை அளித்த நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அந்த மனுக்களில் மனைவியைக் கட்டாயப்படுத்தி கணவா் பாலியல் உறவு கொள்வதை குற்றமாக்க கோரப்பட்டுள்ள நிலையில், அவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, பி.வி.நாகரத்னா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுக்கள் தொடா்பாக மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒத்திவைத்தனா்.