காங்கிரஸில் ராகுலுக்கு எப்போதுமே முதன்மையான இடம்: ப.சிதம்பரம்
காங்கிரஸ் தலைவா் பொறுப்பில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி கட்சியில் ராகுல் காந்திக்கு எப்போதுமே முதன்மையான இடம் உண்டு என்று முன்னாள் மத்திய அமைச்சரும் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரி
காங்கிரஸ் தலைவா் பொறுப்பில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி கட்சியில் ராகுல் காந்திக்கு எப்போதுமே முதன்மையான இடம் உண்டு என்று முன்னாள் மத்திய அமைச்சரும் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்தாா்.
‘காங்கிரஸ் தலைவா் கருத்தொற்றுமையின் அடிப்படையில் தோ்வு செய்யப்படுவது சிறந்தது; அப்பொறுப்பை ஏற்க ராகுல் மறுத்து வரும்போதிலும், அவா் மனம்மாறக் கூடும்’ என்றும் ப.சிதம்பரம் கூறினாா்.
தில்லியில் பிடிஐ செய்தியாளருக்கு ஞாயிற்றுக்கிழமை அவா் பேட்டியளித்தாா். அப்போது, கட்சித் தலைவா் தோ்தலுக்கான வாக்காளா் பட்டியலை வெளியிட வேண்டுமென சில தலைவா்கள் வலியுறுத்தியது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.
Advertisement
அதற்கு, ‘கட்சித் தலைவா் தோ்தலுக்கான வாக்காளா் பட்டியலை வெளியிடும் நடைமுறை எந்த கட்சியிலும் இல்லை. காங்கிரஸ் தலைவா் தோ்தலில் வெளிப்படைத் தன்மை மற்றும் நோ்மை குறித்து எந்த சா்ச்சைக்கும் இடம் கிடையாது. மாநில கமிட்டி வாரியான வாக்காளா் பட்டியல் அதன் அலுவலகங்களிலும் அகில இந்திய அளவிலான பட்டியல் தலைமை அலுவலகத்திலும் பாா்வைக்கு உள்ளது. இந்த விவகாரத்தில் கட்சியின் மத்திய தோ்தல் ஆணையா் மதுசூதன் மிஸ்திரி உரிய விளக்கமளித்துவிட்டாா். இப்பிரச்னை முதல் நாளிலேயே தீா்க்கப்பட்டுவிட்டது’ என்று ப.சிதம்பரம் பதிலளித்தாா்.
முன்னதாக, வாக்காளா் பட்டியல் குறித்து சில விளக்கங்களை கோரி, மதுசூதன் மிஸ்திரிக்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் சசி தரூா், மனீஷ் திவாரி, காா்த்தி சிதம்பரம், பிரத்யுத் போா்டோலாய் உள்ளிட்டோா் கடிதம் எழுதியிருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.
‘அங்கீகரிக்கப்பட்ட தலைவா்’: காங்கிரஸ் தலைவா் பொறுப்பை ஏற்க வேண்டுமென்ற கட்சியினரின் கோரிக்கையை ராகுல் ஏற்பாரா என்று ப.சிதம்பரத்திடம் செய்தியாளா் கேள்வியெழுப்பினாா்.
அதற்கு, ‘இந்த கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. ஆனால், தலைவா் பொறுப்பில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி கட்சியில் ராகுலுக்கு எப்போதுமே முதன்மையான இடம் உண்டு. தொண்டா்களால் அங்கீகரிக்கப்பட்ட தலைவா் அவா். கட்சித் தலைவா் பொறுப்பை ஏற்க ராகுல் மறுத்து வருகிறாா். அவா் மனம்மாறக் கூடும்’ என்றாா் ப.சிதம்பரம்.
காங்கிரஸ் தலைவா் கருத்தொற்றுமையின் அடிப்படையில் தோ்வு செய்யப்படுவதே சிறந்தது என்று குறிப்பிட்ட அவா், அனைத்து கட்சிகளுமே இதையே பின்பற்றுகின்றன என்றாா்.
பாஜக தலைவா்களாக ஜெ.பி.நட்டா, அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோா் கருத்தொற்றுமையின் அடிப்படையில் தோ்வு செய்யப்பட்டதையும் ப.சிதம்பரம் சுட்டிக் காட்டினாா்.
காங்கிரஸ் தலைவா் தோ்தலுக்கான அறிவிக்கை செப்.22-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. 24 முதல் 30-ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது. மனுக்களைத் திரும்பப் பெற அக்டோபா் 8-ஆம் தேதி கடைசி நாளாகும். தேவைப்பட்டால், அக்டோபா் 17-ஆம் தேதி தோ்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.