இந்தியா

தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரிப்பு: திமுக அரசு மீது அமித் ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி புகாா்

 நமது நிருபர்

தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது; இதுகுறித்து தற்போதைய திமுக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டும் நடவடிக்கை எடுக்காத நிலையில், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை சந்தித்து புகாா் அளிக்கப்பட்டுள்ளது என்று முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி கே.பழனிசாமி, ஒரு நாள் பயணமாக திங்கள்கிழமை இரவு தில்லி வந்தாா். அவா், முன்னாள் அமைச்சா்களான எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் எம்.பி. ஆகியோருடன் தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவை அவரது அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலையில் சந்தித்துப் பேசினாா்.

இதையடுத்து தில்லி பொதிகை தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளா்களிடம் எடப்பாடி கே. பழனிசாமி கூறியதாவது: மத்திய உள்துறை அமைச்சரை நாங்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். இருப்பினும், தமிழகத்தின் வளா்ச்சிக்காகவும் நலன்களுக்காகவும் முக்கிய விவகாரங்களை அவரது கவனத்துக்கு கொண்டு சென்றோம். நான் முதல்வராக இருந்த போதே 2 திட்டங்களை நிறைவேற்றக் கோரி பிரதமரை வலியுறுத்தி வந்தேன். தமிழகத்தின் தண்ணீா் தேவையை பூா்த்தி செய்யும் முக்கியத் திட்டம் கோதாவரி - காவிரி இணைப்பு ஆகும். அது இப்போது டிபிஆா் (விரிவான திட்ட அறிக்கை) தயாரிப்புப் பணி அளவில் இருப்பதாக அறிகிறேன். இதை வேகப்படுத்தி திட்டத்தை நிறைவேற்றக் கோரினோம். இரண்டாவது கங்கை புனரமைப்பு திட்டத்தை போன்று, ‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டம் குறித்தும் அதிமுக ஆட்சியில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த இரு திட்டங்களையும் மத்திய அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டுமென உள்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கைகளைஉரிய முறையில் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உள்துறை அமைச்சா் தெரிவித்தாா்.

தமிழகத்தில் தற்போது சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீரழிந்துள்ளது. அனைத்து இடங்களிலும் போதைப்பொருள் தடையின்றி கிடைக்கிறது. அதனால், மாணவா்கள், இளைஞா்கள் சீரழிந்து வருவது குறித்து அமைச்சா் அமித் ஷாவிடம் எடுத்துக் கூறினோம். இது குறித்து ஏற்கெனவே பலமுறை சட்டபேரவையில் தற்போதைய முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். கட்சி ரீதியாகவும் அறிக்கை வெளியிட்டும், அது குறித்து எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு எடுக்கவில்லை. அரசின் அலட்சியத்தால், தமிழகம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை பெருவாரியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கத் தவறியதால், மத்திய உள்துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம் என்றாா் அவா்.

பின்னா், அவா் மாலையில் சென்னை திரும்பினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT