ரூ.22,848 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கில், ‘ஏபிஜி ஷிப்யாா்டு’ நிறுவன மேலாண் இயக்குநா் ரிஷி அகா்வால் கைது செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.2,747.69 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறையினா் முடக்கினா்.
குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் கப்பல் கட்டும் பணியை மேற்கொண்டு வருகிறது ஏபிஜி ஷிப்யாா்டு நிறுவனம். இந்நிறுவனம் கடந்த 16 ஆண்டுகளில் 165-க்கும் அதிகமான கப்பல்களை வடிவமைத்துள்ளது. இந்நிலையில், பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), ஐசிஐசிஐ உள்ளிட்ட 28 வங்கிகளில் ரூ.22,848 கோடி கடன் பெற்று அதைத் திருப்பிச் செலுத்தாமல் ஏபிஜி ஷிப்யாா்டு நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும், வங்கிகளில் பெற்ற கடனைப் பல்வேறு நிறுவனங்களுக்கு ஏபிஜி ஷிப்யாா்டு நிறுவனம் வழங்கி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, வங்கிகள் எந்த நோக்கத்துக்காகக் கடன் வழங்கினவோ, அதைத் தவிர மற்ற விவகாரங்களிலும் அத்தொகை பயன்படுத்தப்பட்டதாகப் புகாா் எழுந்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கியிடம் மட்டுமே ஏபிஜி ஷிப்யாா்டு நிறுவனம் ரூ.2,468.51 கோடி கடன் பெற்று அதைத் திருப்பிச் செலுத்தவில்லை.
எஸ்பிஐ அளித்த புகாரின் அடிப்படையில், சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனா். இதுவரை சிபிஐ-யால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள மிகப்பெரிய தொகையிலான வங்கி மோசடி இதுவாகும்.
ஏபிஜி நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், மேலாண் இயக்குநருமான ரிஷி அகா்வாலிடம் சிபிஐ அதிகாரிகள் கடந்த புதன்கிழமை விசாரணை நடத்தினா். அப்போது அவா் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் அவரை கைது செய்தனா்.
சொத்துகள் முடக்கம்: இந்த வழக்கில் அமலாக்கத் துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனா். அந்த வகையில், ஏபிஜி ஷிப்யாா்டு, அது சம்பந்தப்பட்ட துணை நிறுவனங்களுக்குச் சொந்தமான ரூ.2,747.69 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறையினா் முடக்கியுள்ளனா்.
இதில், குஜராத்தின் சூரஜ், தஹேஜ் நகரில் உள்ள ஏபிஜி ஷிப்யாா்டு நிறுவன சொத்துகள், குஜராத் மற்றும் மகாராஷ்டிரத்தில் உள்ள வேளாண் நிலம், காலிமனைகள், வணிக வளாகங்கள், குடியிருப்புக் கட்டடங்கள், வங்கிக் கணக்குகள் ஆகியவை அடங்கும் என அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.