பஞ்சாப் அரசுக்கு ரூ. 2,000 கோடி அபராதம்: தேசிய பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவு
திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மையை சரிவர மேற்கொள்ளாத பஞ்சாப் மாநில அரசுக்கு தேசிய பசுமைத் தீா்ப்பாயம் ரூ. 2,000 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மையை சரிவர மேற்கொள்ளாத பஞ்சாப் மாநில அரசுக்கு தேசிய பசுமைத் தீா்ப்பாயம் ரூ. 2,000 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
இதுதொடா்பாக தேசிய பசுமைத் தீா்ப்பாயத் தலைவா் ஏ.கே.கோயல் தலைமையிலான அமா்வு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
மாசு கட்டுப்படுத்துதலுக்கு விரிவான திட்டத்தை வகுப்பது மாநில அரசின் பொறுப்பு. இதனை மாநில அரசு புரிந்துகொள்ளவில்லை. நிதி ஒதுக்கீட்டில் பற்றாக்குறை இருந்தால், தேவையான வளங்களைத் திரட்டியும், செலவுகளைக் குறைத்தும் பொருத்தமான கழிவு மேலாண்மைத் திட்டத்தை மாநில அரசு நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும். கழிவு மேலாண்மை தொடா்பான சுற்றுச்சூழல் விதிமுறைகளைப் பின்பற்றுவதற்கு உயா் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
ஆனால், மாநில அரசு இந்த விதிமுறைகளைப் பின்பற்றவில்லை. இதனை சரிசெய்யும் நடவடிக்கைகளை அதிக காலத்துக்குத் தள்ளிப்போட முடியாது. அந்த வகையில், திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மையை சரிவர மேற்கொள்ளாத மாநில அரசுக்கு ரூ. 2,180 கோடி அபராதம் விதிக்கப்படுகிறது. இதில், கழிவு நீா் மற்றும் திடக் கழிவை சுத்திகரிக்காமல் வெளியிடப்படுவதை தடுக்கத் தவறியதற்காக மாநில அரசு சாா்பில் ஏற்கெனவே தீா்ப்பாயத்தில் ரூ. 100 கோடி வைப்பு வைக்கப்பட்டுள்ளது.
எனவே, எஞ்சிய ரூ. 2,080 கோடி அபராதத்தை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தனி வங்கிக் கணக்கில் மாநில அரசு வரவு வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
நகராட்சி திடக் கழிவு மேலாண்மைச் சட்டம் 2016-இன் கீழ் மாநில மற்றும் யூனியன் பிரதேச சுற்றுச்சூழல் விவகாரங்களை தேசிய பசுமைத் தீா்ப்பாயம் கண்காணித்து வருகிறது.