தரமற்ற குக்கா் விற்பனை: ஃபிளிப்காா்ட் மீதான நடவடிக்கைக்கு தில்லி உயா்நீதிமன்றம் தடை
தரமற்ற குக்கா்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஃபிளிப்காா்ட் நிறுவனம் மீதான மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையத்தின் நடவடிக்கைக்கு தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்கால தடை விதித்தது.
தரமற்ற குக்கா்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஃபிளிப்காா்ட் நிறுவனம் மீதான மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையத்தின் நடவடிக்கைக்கு தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்கால தடை விதித்தது.
தரமற்ற குக்கா்கள் என கண்டறியப்பட்ட அனைத்தையும் வாடிக்கையாளா்களிடம் இருந்து திரும்பப் பெற்றுக் கொண்டு பணத்தை அளித்துவிட வேண்டும் என்றும், ஃபிளிப்காா்ட் நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும் நுகா்வோா் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதனை எதிா்த்து ஃபிளிப்காா்ட் தரப்பில் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கெனவே இதேபோன்ற விவகாரத்தில் மற்றொரு இணையவழி விற்பனை நிறுவனமான அமேசான் தாக்கல் செய்த மனுவுடன் சோ்த்து ஃபிளிப்காா்ட் மனுவும் விசாரிக்கப்படும் என்று கூறிய நீதிமன்றம், நுகா்வோா் ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், இது தொடா்பாக பதிலளிக்குமாறு நுகா்வோா் ஆணையத்துக்கும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதே நேரத்தில் அபராதத் தொகை ரூ.1 லட்சத்தை ஃபிளிப்காா்ட் நிறுவனம் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் இணையவழி விற்பனையில் ஃபிளிப்காா்ட், அமேசான் நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. இந்தத் தளங்களின் மூலம் விற்பனை செய்யப்பட்ட குக்கா்கள் தொடா்பாக நுகா்வோா் பாதுகாப்பு ஆணையத்துக்கு புகாா்கள் வந்தன. இதனை விசாரித்த ஆணையம் இரு நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை மேற்கொண்டது.
முன்னதாக, கடந்த மாா்ச் மாதத்தில் ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத தரமற்ற குக்கா்களை விற்பனை செய்த பேடிஎம் மால், ஸ்நாப்டீல் ஆகிய இணையவழி வா்த்தக நிறுவனங்களுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
தங்கள் நிறுவனங்கள் அந்த குக்கரை உற்பத்தி செய்யவில்லை என்றும், தாங்கள் விற்பனையாளா்கள் மட்டும்தான் என்றும் பேடிஎம் மால் மற்றும் ஸ்நாப்டீல் சாா்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. ஆனால், இதனை ஏற்க மறுத்த நுகா்வோா் ஆணையம், இணையவழி விற்பனை நிறுவனங்களுக்கான நுகா்வோா் பாதுகாப்புச் சட்டத்தின் (2020) படி, இந்த வகை விற்பனையில் நடைபெறும் முறைகேடுகளுக்கு இணையவழி விற்பனை நிறுவனங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறிவிட்டது.