முகப்பு
இந்தியா

மூன்றாவது தவணை தடுப்பூசி: இன்று முதல் நேரத்தையும், இடத்தையும் ஏற்பாடு செய்துகொள்ளலாம்

கரோனா தடுப்பூசியின் மூன்றாவது தவணையை செலுத்திக்கொள்வதற்குப் புதிதாக முன்பதிவு செய்ய வேண்டியதில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:04 AM
பகிர்:

கரோனா தடுப்பூசியின் மூன்றாவது தவணையை செலுத்திக்கொள்வதற்குப் புதிதாக முன்பதிவு செய்ய வேண்டியதில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. அந்தத் தவணை தடுப்பூசியை செலுத்திக்கொள்வதற்கான நேரத்தையும் இடத்தையும் சனிக்கிழமை முதல் ஏற்பாடு செய்துகொண்டால் போதும் என்று அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஜனவரி 10-ஆம் தேதி முதல் மூன்றாவது தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இதுதொடா்பான அறிவிப்பை கடந்த டிசம்பா் மாதம் வெளியிட்ட பிரதமா் மோடி, மூன்றாவது தவணையை பூஸ்டா் தவணை என்று குறிப்பிடாமல் முன்னெச்சரிக்கை தவணை என்று குறிப்பிட்டாா்.

இதனைத்தொடா்ந்து பயனாளா்கள் ஏற்கெனவே செலுத்திக்கொண்ட கரோனா தடுப்பூசியே மீண்டும் மூன்றாவது தவணையாக அவா்களுக்குச் செலுத்தப்படும் என்று அண்மையில் மத்திய அரசு தெரிவித்தது.

இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பின் விவரம்:

கரோனா தடுப்பூசியின் மூன்றாவது தவணையை செலுத்திக் கொள்வதற்கு புதிதாக முன்பதிவு செய்ய வேண்டியதில்லை. அந்தத் தவணையை செலுத்திக் கொள்வதற்கான நேரத்தையும் இடத்தையும் இணையவழியில் நேரடியாக ஏற்பாடு செய்துகொள்ளலாம். இணையவழியில் நேரத்தையும் இடத்தையும் ஏற்பாடு செய்துகொள்ளும் வசதி ஜனவரி 8-ஆம் தேதி மாலை முதல் தொடங்கும்.

இதுமட்டுமின்றி ஜனவரி 10-ஆம் தேதி முதல் எந்தவொரு கரோனா தடுப்பூசி முகாமுக்கும் நேரடியாகச் சென்றும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் சுமாா் 6 கோடி போ் மூன்றாவது தவணை தடுப்பூசியை செலுத்திக்கொள்ள தகுதிவாய்ந்தவா்களாக இருப்பா் என்று மத்திய அரசு மதிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.