முஸ்லிம்களின் 4% இடஒதுக்கீடு ரத்து நிறுத்திவைப்பு: உச்சநீதிமன்றத்தில் கா்நாடக அரசு
கா்நாடகத்தில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவீத இடஒதுக்கீட்டை எந்தவித அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் ரத்து செய்தது தவறானது என்பதற்கான முகாந்திரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
கா்நாடகத்தில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவீத இடஒதுக்கீட்டை எந்தவித அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் ரத்து செய்தது தவறானது என்பதற்கான முகாந்திரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இதையடுத்து, இந்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக கா்நாடக அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து முஸ்லிம் சமூகத்தினா் உச்சநீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனா்.
இந்த மனுக்களை நீதிபதிகள் கே.எம். ஜோசப், பி.வி. நாகரத்னா ஆகியோா் அடங்கிய அமா்வு வியாழக்கிழமை விசாரித்தது.
அப்போது மனுதாரா்கள் சாா்பில் மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், துஷாந்த் தவே, கோபால் சங்கரநாராயணன் ஆகியோா் ஆஜராகி, இடஒதுக்கீடு தொடா்பாக எந்தவித ஆய்வும் நடத்தாமல் முஸ்லிம்களின் 4 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான எந்தவித தரவுகளும் மாநில அரசிடம் இல்லை’ என்றனா்.
கா்நாடக அரசு சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, இந்த விவகாரம் தொடா்பாக பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவை என்றும், அதுவரையில் கா்நாடக அரசு பிறப்பித்த இந்த இடஒதுக்கீடு உத்தரவின் அடிப்படையில் பணிநியமனங்கள் வழங்கப்படாது என்றும் உறுதி அளித்தாா்.
லிங்காயத், ஒக்கலிகா சமூகத்தினா் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி, இந்த வழக்கில் தங்கள் தரப்பில் எந்தவித கருத்தையும் கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டாா். அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவீத இடஒதுக்கீட்டை எந்தவித அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் ரத்து செய்தது தவறானது என்பதற்கான முகாந்திரம் உள்ளது என்று கருத்து தெரிவித்தனா்.
மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணையை ஏப்ரல் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்வதாக அண்மையில் கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை அறிவித்தாா். இந்த நான்கு சதவீத இடஒதுக்கீடு லிங்காயத், ஒக்கலிகா சமுதாயத்தினருக்கு பிரித்து வழங்கப்படும் என்றும், முஸ்லிம்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினா் பிரிவில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவா் தெரிவித்திருந்தாா்.
கா்நாடக பேரவைக்கு தோ்தல் அறிவிப்பு வெளியாவதற்கு சில தினங்களுக்கு முன்பு முதல்வா் பசவராஜ் பொம்மை இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தாா்.