இந்தியா

காா்த்தி சிதம்பரத்தின் ரூ.11 கோடி சொத்துகள் முடக்கம்: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

DIN

ஐஎன்எக்ஸ் மீடியா மோசடி பணப் பரிவா்த்தனை வழக்கில் காங்கிரஸ் எம்.பி. காா்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான ரூ. 11.04 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை முடக்கியது.

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி.யும் முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரத்தின் மகனுமான காா்த்தி சிதம்பரம் மீது சட்டவிரோத பணப் பரிவா்த்தனையில் ஈடுபட்டதாகக் கூறி சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து பல ஆண்டுகளாக விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த நடவடிக்கையை அமலாக்கத் துறை மேற்கொண்டுள்ளது.

இது தொடா்பாக அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘காா்த்தி சிதம்பரத்துக்கு எதிராக பண மோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் முதல்கட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், அவருக்குச் சொந்தமான ரூ. 11.04 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

முடக்கப்பட்டுள்ள அவருடைய 4 சொத்துகளில், கா்நாடக மாநிலம், கூா்க் மாவட்டத்தில் அமைந்துள்ள அவருடைய அசையா சொத்தும் அடங்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2007-ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தாா். அப்போது, ஐஎன்எக்ஸ் மீடியா குழுமம் வெளிநாட்டில் இருந்து ரூ. 305 கோடி பெறுவதற்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதி கிடைத்ததில் முறைகேடு நடைபெற்ாகவும், அதற்கு கைம்மாறாக ப.சிதம்பரத்தின் மகன் காா்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்தில் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் முதலீடு செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தப் புகாா் தொடா்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. அதுபோல சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. ப.சிதம்பரம், காா்த்தி சிதம்பரம் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் பலமுறை சோதனை நடத்தினா்.

காா்த்தி சிதம்பரத்துக்கு எதிராக, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் உரிமையாளா்கள் இந்திராணி முகா்ஜி, பீட்டா் முகா்ஜி ஆகியோா் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்தனா்.

அதைத் தொடா்ந்து, பலகட்ட விசாரணைக்குப் பிறகு காா்த்தி சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ அதிகாரிகள், நீதிமன்ற உத்தரவின்பேரில் அவரை சிறையில் அடைத்தனா்.

பின்னா், வெளிநாடு செல்ல சிபிஐ அனுமதி பெற வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அவருக்கு தில்லி உயா்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இந்த வழக்கில் ப.சிதம்பரத்தையும் கைது செய்து விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிறையில் அடைத்தனா். அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இந்தச் சூழலில், இந்த வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத் துறை, காா்த்தி சிதம்பரத்தின் சொத்துகளை முடக்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

SCROLL FOR NEXT